வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (06/05/2018)

கடைசி தொடர்பு:10:35 (07/05/2018)

கிருஷ்ணசாமி குடும்பத்தினருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்!

எர்ணாகுளத்தில் மரணமடைந்த திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின்  குடும்பத்தினருக்கு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேரில் ஆறுதல் கூறினார். 

கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்

கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு நீட் தேர்வு எழுதுவதற்காகத் தனது மகனை அழைத்துச்சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல், எர்ணாகுளத்திலிருந்து சொந்த ஊருக்கு எடுத்து வரப்படுகிறது. இந்த நிலையில், திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடியில் உள்ள கிருஷ்ணசாமி வீட்டுக்கு வந்த அமைச்சர் துரைக்கண்ணு, அவரது மனைவி பாரதி மகாதேவி ,மகள் ஐஸ்வர்யா தேவி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, ``தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்ததோடு, கஸ்தூரி மகாலிங்கத்தின் மேல்படிப்புச் செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. மனிதாபிமான அடிப்படையில், நேரடியாக பாரதி மகாதேவியிடம் தொலைபேசியில் முதலமைச்சரே  ஆறுதல் கூறியுள்ளார். மேலும், என்னையும் நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், நான் நேரடியாக வருகை தந்து ஆறுதல் கூறினேன்’ என்றார்.  
தமிழக மாணவர்கள், வெளிமாநிலங்களில் நீட் நுழைவுத் தேர்வு எழுதப் பணிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு, உச்ச நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், போதிய கால அவகாசம் இல்லை என்றார். மேலும், அடுத்த ஆண்டாவது நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு, `முதலமைச்சர் உரிய அழுத்தத்தைக்கொடுப்பார்’ என்றதோடு முடித்துக்கொண்டார்.