நெஞ்சுவலியால் துடித்த தந்தையைக் காப்பாற்ற முடியாமல் தவித்த மகள்! நீட் தேர்வு எழுதிவிட்டுத் திரும்பியபோது சோகம்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் பலி எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டாக உயர்ந்திருக்கிறது. இச்சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிங்கம்புணரி கண்ணன்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், சொந்தமாக ஆயில் மில் நடத்திவருகிறார். இவரது மனைவி நர்மதா. இந்தத் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள்.  இளைய மகளான ஐஸ்வர்யா, இங்குள்ள வள்ளல் பாரி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். 

இன்று நடந்த நீட் தேர்வுக்காக, மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் ஐஸ்வர்யாவுக்கு சென்டர் போடப்பட்டிருந்தது. அங்கு தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மகளிடம், வினாத்தாள் பற்றி கேட்டார் கண்ணன். ரொம்ப கஷ்டமாக இருந்ததுப்பா என்று மகள் சொன்னதும் இவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கிறது. உடனே பக்கத்தில் இருந்த ஆட்டோவில் ஏறி, தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்கள், இங்கு பார்க்கமுடியாது என்று சொன்னதும் ஆம்புலன்ஸ் மூலம்  மதுரை ராஜாஜி  அரசு மருத்துவமனைக்குக் கொண்க்சென்றனர். உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், இறந்துவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள். இது வரைக்கும் போராடிய மாணவி ஐஸ்வரியா, தன் தந்தையைக் காப்பாற்ற முடியாமல் தவியாய் தவித்துப்போனார். அதன்பிறகு ஊருக்கு தகவல் தெரிவித்து, அங்கிருந்து உறவினர்கள் கையெழுத்துப் போட்டு உடலைப் பெற்றுக்கொண்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி சென்றார்கள். இவரின் மரணச் செய்தி கேட்டு ஊரே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

நீட் தேர்வு வேண்டாம் என்று போராடிய தமிழக மாணவர்களை சி.பி.எஸ்.இ தேர்வுத் துறை சென்டர்கள் ஒதுக்கீடு செய்ததில் பலிவாங்கியிருக்கிறது என்று தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. 

கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதச் சென்ற கொடுமை என்றாலும், திருத்துறைப்பூண்டி யைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், இதேபோன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  இவரைத் தொடர்ந்து, சிங்கம்புணரி கண்ணன் மரணம் அடைந்துள்ளார். ஒரு பக்கம் மாணவர்கள் பதற்றம், மற்றொரு பக்கம் பெற்றோரின் பதற்றம். இதனால், மன அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!