நீட் தேர்வு: கைகளில் விலங்கிட்டு காந்தி சிலைமுன் போராடியவர்கள் கைது!

நீட் தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து கையில் விலங்கிட்டு கொண்டு காந்தி சிலை முன் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது.

நீட் தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்களைப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய மத்திய அரசைக் கண்டித்து, கையில் விலங்கிட்டுக் கொண்டு காந்தி சிலை முன் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைதுசெய்யப்பட்டனர். 

நீட் தேர்வு முறையை கண்டித்து விலங்கிட்டு போராட்டம்

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தகுதித் தேர்வான நீட் தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வை தமிழக மாணவர்களும், அரசியல், சமூக இயக்கங்களும் எதிர்த்துவருகின்றன. ஆனாலும், உச்ச நீதிமன்றத்தால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்தது. இது தவிர தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், மணிப்பூர் மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், வேறு வழியின்றி தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வை எழுதினர்.

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்
 இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் கடும் மன உளைச்சலுடன் தேர்வு எழுதிய மாணவர்களின் உச்சபட்ச சோகமாக, நீட் தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவரின் தந்தை உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி  விளக்குடி பகுதியைச் சேர்ந்தவர், கிருஷ்ணசாமி. இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்குத் துணையாக கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்திற்குச் சென்றிருந்தார். மகனை தேர்வு அறைக்கு அனுப்பிவிட்டு, தங்கும் விடுதியில் காத்திருந்த கிருஷ்ணசாமிக்கு, திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். தேர்வு எழுதிவிட்டுத் திரும்பிய மகாலிங்கம், தனது தந்தைக்கு நேர்ந்த கதியை அறிய முடியாமல் தவித்த காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கிருஷ்ணசாமியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்நிலையில், ராமேஸ்வரம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர், அதன் நிர்வாகி செரோன்குமார் தலைமையில், கைகளில் விலங்கிட்டுக்கொண்டு காந்தி சிலை முன், கூண்டுக்குள் அமர்ந்தபடி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காந்தி சிலையை விட்டு வருமாறு அழைத்தனர். அவர்கள் வர மறுக்கவே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!