வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (07/05/2018)

கடைசி தொடர்பு:08:35 (07/05/2018)

”பன்னீர் செல்வம் சந்ததியினரும் இங்குதான் வாழ வேண்டும்” ஆர்ப்பாட்டத்தில் சீறிய தினகரன்!

மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. டி.டி.வி. தினகரன் தலைமையில், பொட்டிபுரம் அருகே உள்ள டி.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள சோளக்காட்டில் நடைபெற்றது. முன்னதாக மழை பெய்ததால், பலரும் கலைந்துசென்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய டி.டி.வி. தினகரன், "நியூட்ரினோ திட்டம் வருங்கால சந்ததியினரைப் பாதிக்கும். ஜெயலலிதா இருக்கும் வரை மக்கள் விரோதத் திட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் போட்டிபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், பன்னீர்செல்வம் அவரது தொகுதியில் நியூட்ரினோவை அனுமதிக்கிறார்.

தினகரன்

அவரது சந்ததியினரும் இங்கேதான் வாழ வேண்டும் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். வேறு எங்காவது நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டுசெல்லுங்கள். விவசாய பூமியான தேனி மாவட்டத்துக்கு இத்திட்டம் வேண்டாம்" என்று பேசினார். வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே டி.டி.வி. தினகரனின் மேடைப்பேச்சு அமைந்தது. கண்டன முழக்கங்கள் ஏதும் இல்லாமலே கண்டன ஆர்ப்பாட்டம் முடிவுற்றது. இதில், தினகரன் ஆதரவாளர்கள் தங்கத் தமிழ்ச்செல்வன், கதிர்காமு, செந்தில்பாலாஜி, சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு முதலில் போலீஸார் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், நீதிமன்ற அனுமதியோடு நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம்  என்பதால், பொட்டிபுரம் உட்பட அப்பகுதி கிராம மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தைப் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், பெயருக்கு மேடைக்கு வந்து டி.டி.வி. தினகரன் பேசிவிட்டுச் சென்றதால் அதிருப்தியடைந்தனர்.