Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சி மாணவி உருவாக்கிய 'அனிதா சாட்' செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது!

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி மறைந்த மாணவி அனிதாவின் பெயரில், திருச்சி மாணவி வில்லட் ஓவியா உருவாக்கிய பூமி மாசுபடுவதைத் துல்லியமாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோள், இன்று விண்ணில் பாய்கிறது.

அனிதா சாட்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள குமரேசபுரத்தைச் சேர்ந்தவர், ஆல்பர்ட் சி.எஸ்.குமார்-சசிகலா  இவர்களின் மூத்த மகள், வில்லட் ஓவியா. திருச்சி பெல் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுதியுள்ளார். இவர் உருவாக்கிய, அனிதா சாட் மினி செயற்கைக்கோள், வரும் மே மாதம் 6-ம் தேதி விண்ணில் பாய  இருக்கிறது. விண்வெளியில், வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல்குறித்து ஆய்வு மேற்கொள்ளும்  குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோளுக்கு, ‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடி தனது உயிரைக் கொடுத்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக, ‘அனிதா சாட்’எனும் பெயரை வில்லட் ஓவியா சூட்டியுள்ளார். இந்த செயற்கைக்கோள், இன்று மெக்ஸிகோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சித் தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

செயற்கைகோள் வில்லட் ஓவியா, “அப்பா பெங்களூரில் வேலைசெய்கிறார். எங்களைப் பார்த்துக்கொள்வது அம்மாவும், பாட்டியும்தான். எங்களைவிட அம்மாதான் எப்போதும் பரபரப்பாகவே இருப்பாங்க. அவர்களின் நிறைவேறாத கனவுகளை எங்கள்மூலம் நிறைவேற்றி இருக்காங்க.  உண்மையில், எதற்காகவும்  எங்களுக்கு  அழுத்தம் கொடுத்ததில்லை. அதுதான் எனக்குள் ஆர்வத்தைஉண்டாக்கியது. நான் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு எவ்வளவு நேரம்உழைக்கிறேனோ, அதுவரை அம்மா என்னோடு கண்விழித்துக் காத்திருப்பார்.

சின்ன வயசில் இருந்தே நான் கொஞ்சம் சுட்டியாகவே இருப்பேன்.  நல்லா படிப்பேன். கூடவே பள்ளியிலிருந்து என்னை நிறைய அறிவியல் கண்காட்சிகளுக்கு அழைத்துச்செல்வார்கள். அதுதான் அறியியல் மீதான ஆர்வத்தை உண்டாக்கியது. எங்கள் ஆசிரியர் சுதா ரகுநாதன் மற்றும் பள்ளி நிர்வாகமும் எனக்குள் இருந்த திறமையைக் கண்டறிந்து ஊக்கமளித்தார்கள்.

அந்த வகையில், 7-ம் வகுப்பு படிக்கும்போது நான் கண்டுபிடித்த “ஆட்டோமேட்டிக் கூலிங் சிஸ்டம்” எனும் கருவிக்காக பரிசு வாங்கினேன். முதன்முதலில் வாங்கிய அந்தப் பரிசும் பாராட்டும் எனக்கு ஆர்வத்தை உண்டாக்கியது.

அதன் தொடர்ச்சியாக,  எங்கு போட்டி நடந்தாலும் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அப்போது, மாவட்ட அளவில் நடந்த “அக்னீஸ் சிக் நைட்”  எனும்  போட்டியில்  கலந்துகொண்டேன்.  அதன்மூலம், பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஏழாம் அறிவு” எனும் மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், இறுதியாக நான் முதல் பரிசு பெற்றேன்.

இதுவரை நான், விவசாயிகளுக்கு உதவும் வகையில், மண்ணின் ஈரத்தன்மைகுறித்துத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தண்ணீர் பாய்ச்சும் கருவி, காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்களின் கை அசைவுகள்மூலம் அவர்களின் தேவையை ஒலியாகப் பிரதிபலிக்கும் “ஹேன் ஜஸ்டர் வோகலைசர்” எனும் கருவி, கிராமத்து மக்களுக்கு உதவும் வகையில் பேருந்து நிலையங்களில் இருக்கும் பேருந்துகள்குறித்து விளக்கும் கருவி உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளேன்.

அதில், விவசாயம் தொடர்பான எனது கண்டுபிடிப்பைப் பார்த்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், என்னை வாழ்த்தி, எனது கண்டுபிடிப்புகள்குறித்து கேட்டுக்கொண்டவர், நிறைய ஆலோசனைகள் கூறினார். அது என்னை அடுத்த கட்டத்துக்கு யோசிக்கவைத்தது. அவரிடம் பேசியபிறகு, செயற்கைக்கோள் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டேன். அதன் தொடர்ச்சியாக, புவி மாசுபடுவதைக் கண்டறியும் செயற்கைக்கோளைத் தயாரிக்க முடிவுசெய்தேன். இந்நிலையில், ஏழாம் அறிவு நிகழ்ச்சியின்மூலம் எங்களுக்கு அறிமுகமான சென்னையைச் சேர்ந்த  அக்னி ஃபவுண்டேஷன் நடத்திவரும் அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ், கருடா ஏர் ஸ்பேர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமல்ராஜ் ஆகியோர், எனது கண்டுபிடிப்புகளுக்கும் எனக்கும் உதவ முன்வந்தார்கள். இதுவரை அனைத்து செலவையும் பார்த்துக் கொள்கிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக உழைத்து, 'அனிதா சாட்' மினி சாட்டிலைட்டை உருவாக்கியுள்ளேன். இது 'குளோபல் வார்மிங்' முறையால் காற்று மாசுபடுவது மற்றும் பூமி வெப்பமாவது குறித்து, காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன், கார்பன் உள்ளிட்ட மூலக்கூறுகளின் அளவுகளைக் கண்டுபிடிக்கும். இந்த செயற்கைகோளில் 4 சென்சார்கள், கைரோ மீட்டர், கேமரா மற்றும் ஜிபிஆர்எஸ் கருவிகளைப் பொருத்தியுள்ளேன். இதன்மூலம், செயற்கைக்கோளின் பயணத்தை மொபைல்மூலம் துல்லியமாகப் பார்த்துக்கொள்ள முடியும்.

வில்லட்ஓவியா

புவியின் உள்வட்டப்பாதையில் பறக்க இருக்கும் இந்த மினி சாட்டிலைட், உலக வெப்பமயமாதலின் விளைவுகள்குறித்த தகவல்களைச் சேகரித்து நமக்கு அனுப்பும்.  இதற்கு, அரியலுார் மாணவி அனிதாவின் பெயரை வைத்துள்ளேன். நீட் தேர்வுக்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தால், அனிதா மருத்துவராகி இருப்பார். கால அவகாசம் இல்லாததால், அனிதாவால் மருத்துவராக முடியல. அதுவே அவரது இறப்புக்கும் காரணமானது. அதனால், எனது கண்டுபிடிப்புக்கு 'அனிதா சாட்' என்று பெயர் வைத்துள்ளோம். இந்தச் சாட்டிலைட் குறித்து அமைச்சர் செங்கோட்டைன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரிடம் கூறியபோது, என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார்கள்.

எனது கனவை மட்டுமல்ல, அனிதாவின் கனவையும் சுமந்த எனது அனிதா சாட்டிலைட், இன்று மெக்ஸிகோ-வில் இருந்து விண்ணில் பாய உள்ளது. நான் இன்று நீட் நுழைவுத் தேர்வு எழுதியதால், என்னால் மெக்ஸிகோ போகமுடியல. வருங்காலத்தில் நிச்சயம் மருத்துவர் ஆகி, மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வேன் என்றார் நம்பிக்கையுடன்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement