”பணமும் வேலையும் அளித்தால் இறந்த உயிர் வந்துவிடுமா?” -வைகோ கேள்வி!

தமிழக அரசு அதற்கு என்னவிதமான போராட்டத்தை நடத்தினார்கள். எந்த விதத்தில் அழுத்தம் கொடுத்தார்கள். வேறு மாநிலத்தில் தேர்வு என்ற உடனே கொதித்து எழுந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா? தமிழகத்தில் இல்லாத பள்ளிகளா கேரளாவிலும், ராஜஸ்மானிலும் இருக்கின்றது

வைகோ

சிதம்பரத்தில், ம.தி.மு.க -வின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நகர ம.தி.மு.க சார்பில் நடந்த நிகழ்ச்சியில், காந்தி சிலை அருகில் கட்சிக் கொடியை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஏற்றிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "ம.தி.மு.க பல்வேறு சோதனைகளைக் கடந்து வெள்ளி விழா கண்டுள்ளது. 25-வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில், ம.தி.மு.க-வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டு மொத்த நலனுக்கும், வாழ்வாதாரத்துக்கும் கேடு விளைக்கக்கூடிய சூழல் உள்ளது. மத்திய அரசு ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்திலும் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது. இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடவேண்டிய நிலையில் மதவாத சக்திகளின் பிரவேசத்தையும் தடுக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தி.மு.க-வுடன் கைகோர்த்துள்ளோம். இரு தரப்பிலும் நல்ல புரிதலும், நேச உணர்வோடும் இது தொடர்கிறது. நீட் தேர்வு  என்பது தமிழகத்தின் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் ஒரு அநீதியாகும். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழக அரசு வழங்கிய மசோதாவை மத்திய அரசு குப்பையில் போட்டுவிட்டது. தமிழக அரசு, அதற்கு என்ன விதமான  போராட்டத்தை நடத்தினார்கள். எந்த விதத்தில் அழுத்தம்கொடுத்தார்கள். வேறு மாநிலத்தில் தேர்வு என்ற உடனே கொதித்து எழுந்து அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா? தமிழகத்தில் இல்லாத பள்ளிகளா கேரளாவிலும், ராஜஸ்தானிலும் இருக்கின்றன... தமிழர்கள் சர்வதேச அகதிகளா? தங்க இடமில்லாமல் உணவு இல்லாமல், ஒருவிதமான மன அழுத்தத்திலேயே தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி வெற்றிபெற முடியும்? மாணவனின் தந்தை இறந்த செய்தி கேள்விப்பட்டதும், நான் கேரள ஆளுநர் சதாசிவத்திடம் பேசினேன். மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசினேன். அரசு, ரூ 3 லட்சம் பணம் தருகிறோம். வேலை தருகிறோம் என்றால், இறந்த உயிர் வந்துவிடுமா?" எனக் கடுமையாகப் பேசினார். 

செய்தியாளர் ஒருவர், நீட் தேர்வுக்கு வெளி மாநிலத்தில் தேர்வுமையம்  அமைக்கப்பட்டதற்கு எதிர்க் கட்சிகள் முன்பே என்ன செய்தன எனக் கேட்டார். இதனால் கோபமடைந்த வைகோ, 'நீங்க எப்பவுமே இப்படித்தான் குதர்க்கமா கேள்வி கேட்பீர்கள், உங்களை இப்படி கேளுங்கள் எனக் கூறி சொல்லி அனுப்புவார்களா? உங்களுக்கு இதே பொழப்புதான். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்தி போடுங்கள் எனக் கூறிச் சென்றார்.  வைகோவின் இந்த நடவடிக்கையால், அங்கு இருந்த சக செய்தியாளர்கள் 'வைகோவுக்கு என்ன ஆயிற்று, ஏன் இப்படி கோபப்படுகிறார்'  எனக் கேட்டவாறே கலைந்துசென்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!