எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் சொந்த ஊர் வந்தது - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி

எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி வந்தடைந்தது.

கிருஷ்ணசாமி

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நீட் தேர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில்  தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு,  தேர்வு  நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை வெளிமாநிலங்களுக்குச் சென்று எழுதுவதற்குத்  தமிழக மாணவர்கள் மிகுந்த சிரமம்  அடைவார்கள், தமிழகத்திலேயே  தேர்வு மையத்தை  அமைக்க வேண்டும் என வலியுறுத்திய அரசியல் கட்சிகள், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் எந்த மாற்றமும் செய்யாமல்  நீட் தேர்வு நடைபெற்றது. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள விளக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்தார். அவருக்குக் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் மகனைத் தேர்வு எழுத அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி மகனைத் தேர்வுக்கு அனுப்பி வைத்த பின்னர் விடுதியில் காத்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருடைய உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி விளக்குடிக்கு தற்போது வந்து சேர்ந்தது. உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் கிருஷ்ணசாமியின் உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!