Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“என் அண்ணா சாவுக்கு அவர்தான் காரணம்னு முதலமைச்சர்ட்ட சொல்லிடுங்கண்ணா!” - தினேஷின் தங்கை

Sankarankoil: 

ன்னைக்குக் காலையில திருநெல்வேலியில் இருக்கிற ஆச்சி வீட்டுக்குப் போயிட்டு வர்றேனு சொல்லிட்டுத்தானே போனான். படுபாவி இப்புடி தம்பியையும் தங்கச்சிகளையும் பரிதவிக்க விட்டுட்டு, அவன் அம்மா போன இடத்துக்கே போய்ச் சேந்துட்டானே” 

தனது தந்தை மது குடிப்பதால் மனமுடைந்து, திருநெல்வேலி பாலத்தின் மீது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட தினேஷின் சித்தி குருவம்மாளின் கதறல் இது. அவருக்கு ஆறுதல் சொல்லக்கூட நம்மிடம் வார்த்தையில்லை. சில நிமிட அமைதிக்குப் பிறகு, அவரே ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

தினேஷ் முதலமைச்சர், பிரதமருக்கு எழுதிய கடிதம்

“அவனுக்கு இந்த வீட்டுல என்னய்யா குறைவெச்சோம். ராசா மாதிரி சுத்திக்கிட்டிருந்தான். நல்லா படிக்கிற பையன். வீட்டுக்கு மூத்தவன். நான் அவன் அப்பாவுக்கு ரெண்டாந்தாரம். சின்ன வயசுலயே அவன் அம்மா மூணு புள்ளைகளையும் விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டா. அப்பறம்தான் என்னைய கட்டிவெச்சாங்க. ஏற்கெனவே மூணு கொழந்தைகள் இருக்கு. அதுங்களை நல்லபடியா வளர்ப்போம்னுதான் நான் ஒரு பெண் குழந்தையோடு நிறுத்திக்கிட்டேன். அவ பேரு முத்துச்செல்வி. ரெண்டாங் கிளாஸ் படிக்கிறா. தினேஷுக்கு ஒரு தம்பியும் (பாலசந்தர்), ஒரு தங்கச்சியும் (தனுஷியாஸ்ரீ) இருக்குதுங்க. தினேஷ் அவன் தம்பி தங்கச்சியோடு எப்படி பழகுவானோ, அப்படித்தான் என் பொண்ணுக்கிட்டயும் பழகுவான். என்கிட்டயும் பாசமா இருப்பான். நானோ, அவன் அப்பாவோ, அவனை அதட்டினதுகூட கிடையாது. அன்னைக்கு ரேஷன் கடைக்குப் போயிட்டு வரச் சொன்னேன். 'என்னால போவ முடியாது. நான் எலந்தகொளத்துல இருக்கிற ஆச்சி வீட்டுக்குப் போயிட்டு சாயந்தரம் வாரேன்'னு சொன்னான். ஆனா, இப்படி ஒரு முடிவை எடுப்பான்னு யாருமே யோசிச்சுக்கூட பார்க்கலைய்யா. இந்தா அவன் அப்பாவே வந்துட்டாக. அவருக்கிட்டயே பேசுங்கய்யா. மனுஷன் ஒடைஞ்சுபோய் உட்காந்துருக்காரு” என்கிறார். 

தினேஷுன் அப்பா மாடசாமி, ''எய்யா எய்யா எம்புள்ள போயிட்டானேய்யா. அய்யரு வூட்டு புள்ள மாதிரி இருப்பானேய்யா. இப்புடி தண்ணியில கரைச்சுட்டு வந்துட்டேனேய்யா” -  ஆசை மகனைப் பறிகொடுத்த தீனமான குரல் நம்மை உலுக்கிப்போடுகிறது. 

“நான் தெனமும்தான்யா குடிப்பேன். அவன் பக்கத்துல இருக்கும்போதே குடிச்சிருக்கேன். அதையெல்லாம் உள்ளுக்குள்ளேயே வெச்சிருந்திருக்கான். ஒருநாளாச்சும் 'எப்பா நீ குடிக்காதே'னு கண்டிப்போடு சொல்லியிருந்தான்னா, அப்போவே இந்தச் சனியனை ஒழிச்சிருப்பேனே. நல்லா படிக்கிற பையன். எல்.கே.ஜி படிக்கும்போதே அவனை என் தம்பி அவன் வீட்டுக்குத் தூக்கிட்டுப்போயிட்டான். பத்தாவது வரைக்கும் அங்கேதான் வளர்ந்தான். அடிக்கடி இங்கே வருவான். வயலுக்குப் போனாலும், வாய்க்காலுக்குப் போனாலும் கூடவே வந்துருவான். அப்பவும், 'அப்பா நீ குடிக்கிறது புடிக்கலை. இனிமே குடிக்காதே'னு சொன்னதே இல்லே. எல்லாத்துக்கும் சேர்த்துவெச்சு இப்புடி கடிதாசி எழுதிட்டுப் போயிட்டான். அதைப் பாத்துட்டு பத்திரிகைகாரங்களும் போலீஸ்காரங்களும் என்னைய கடைசி காரியம் பண்ணக்கூடாதுன்னு சொன்னாங்க. நானும் எம் மவன் ஆசையை நிறைவேத்தணும்னுதான் நினைச்சேன். ஆனா, ஊர்க்காரங்கதான் 'பெத்தவன்தான் புள்ளைக்கு கொள்ளி போடணும்'னு கட்டாயப்படுத்தி செய்ய வெச்சாங்க. என்னை மன்னிச்சிடுப்பா. அப்பாவால உன் கடைசி ஆசையை நிறைவேத்த முடியலை. சத்தியமா சொல்றேன் ராசா, இனிமே என்னைக்கும் அப்பா குடிக்க மாட்டேண்டா. குடிக்கவே மாட்டேன்” - திரும்பத் திரும்ப இந்த வார்த்தையையே சொல்லி கதறுகிறார் மாடசாமி.

“அண்ணே, நான் தினேஷ் அண்ணாவின் தங்கச்சி தனுஷியா பேசறேன். நீங்க சென்னையில் இருக்கிறதா அப்பா சொன்னுச்சு. உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்கட்டுமா. நம்ம முதலமைச்சர் சென்னையிலதான் இருக்காங்க? நீங்க அவங்களைப் பார்ப்பீங்களா? பார்த்தால், என் அண்ணன் சாவுக்கு அவர்தான் காரணம்னு சொல்லிடறீங்களா. நீங்க பயப்பட வேணாம். அவரு உங்களைத் திட்டுனா நான்தான் சொன்னேன்னு சொல்லிடுங்க. மறக்காம முதலமைச்சர்கிட்ட சொல்லிடுங்கண்ணா'' - என்கிறாள் தனுஷியாஶ்ரீ

இந்த மழலை வார்த்தைகள் முதல்வரின் காதுகளுக்கு எட்டாது என்பதை  அவளிடம் எப்படி சொல்வது? 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement