வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (07/05/2018)

கடைசி தொடர்பு:10:46 (07/05/2018)

இரவில் ரோந்துக்குச் சென்ற காவலருக்கு நடந்த கொடூரம்! மணல் கொள்ளையர்கள் வெறிச்செயல்

நெல்லையில் மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற போலீஸை, மணல் கொள்ளையர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெகதீசன்

நெல்லை மாவட்டத்தில் ஓடும் நம்பியாறு மணல் கடத்தல்காரர்களின் சொர்க்கபுரியாக உள்ளது. இந்தப் பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையால் சுற்றுப்புற விளை நிலங்கள் பாதிப்படைவதுடன் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. அதனால் மணல் கொள்ளையைத் தடுக்க சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்களே நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களை மணல் கொள்ளையர்கள் கொலை செய்கிறார்கள்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், இந்தப் பகுதியில் மணல் கடத்தலைத் தடுத்த சதீஷ்குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். கடந்த 10 தினங்களுக்கு முன்னால் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுத்த செல்லப்பா என்பவரை மணல் கொள்ளையர்கள் லாரி ஏற்றி கொலை செய்தனர்.

இந்த நிலையில்,  நெல்லை மாவட்டம், விஜயநாராயணம் அருகே நம்பியாற்றில் மணல் கொள்ளை நடப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு விசாரிக்க சென்ற சிறப்புப் பிரிவு காவலர் ஜெகதீசன் தலையில் படுகாயத்துடன் உயிரிழந்துள்ளார். இரவில் ரோந்துப் பணிக்குச் சென்றவர் காலை வரையிலும் திரும்பவில்லை என்று உடன் பணியாற்றும் காவலர்கள் அவரைத் தேடினார்கள்.

அப்போது உயிரிழந்த நிலையில், நம்பியாற்றில் மணல் கொள்ளை நடைபெறும் இடத்தில் அவரது உடல் கிடந்தது. அவரது தலையில் கம்பியால் மணல் கொள்ளையர் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். டிராக்டரில் மணல் கடத்தியதைக் கண்டுபிடித்து, அதைத் தடுக்க முயன்றபோது, அவரை மணல் கொள்ளையர்கள் கம்பியால் தாக்கிவிட்டு தப்பியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.