மணல் கொள்ளைக்கு எதிராகப் புகார்! போலீஸால் வங்கி துணை மேலாளருக்கு நடந்த துயரம்

தனது பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைப் பற்றி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிய இளைஞர் மீது பொய் வழக்கு போட்டதோடு, அவரை கடுமையாகத் தாக்கியுள்ளது போலீஸ். இதனால் வேதனையடைந்த அந்த இளைஞர், மன உளைச்சலில் விஷம் குடிக்க, ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது நெரூர் தென்பாகம் மறவாபாளையம். இந்தப் பகுதியில் ஓடும் காவிரியாற்றில் இரவும், பகலுமாக மணல் கடத்தல் நடைபெற்றிருக்கிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் புள்ளிகள், இந்த மணல் கடத்தலைத் தொடர்ந்து நடத்திவந்திருக்கிறார்கள். அதைத் தடுக்காத காவல்துறை, அவர்களுக்கு உடந்தையாக இருந்துவந்திருக்கிறது. இந்த மணல் கடத்தலைப்பற்றி முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், காவல்துறை என்று பல தரப்புக்கும் புகார் அனுப்பி வந்திருக்கிறார், அதே ஊரைச் சேர்ந்த நரேன் என்ற இளைஞர். இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றிவருகிறார். மணல் கடத்தல் பற்றி புகார் கொடுத்த நரேன் மீது கோபமான மணல் கடத்தல் மாஃபியாக்கள், வாங்கல் காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதனால், எவ்வித முகாந்திரமும் இன்றி, இரவு திருவிழாவில் கலைநிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்த நரேனை வாங்கல் போலீஸார் அடித்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.

ஸ்டேஷனில் வைத்து கடுமையாகத் தாக்கியதோடு, இனி மணல் கடத்தல் பற்றி புகார் அனுப்பக் கூடாது என்று உத்தரவாதம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு மறுக்க, எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். இதனால் மன உளைச்சக்கு ஆளான நரேன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு, ஐ.சி.யூ-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி, நம்மிடம் பேசிய அவரது உறவினர்கள், ''தனியார் வங்கியில் துணை மேலாளராக இருக்கும் உனக்கு எதுக்கு இந்தச் சமூக அக்கறைனு அடிக்கடி கேட்போம். 'நம்ம பகுதி இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களை நாம தட்டிக் கேட்கலைனா, வேற யார் கேட்பா'ன்னு சொல்லி எங்க வாயை அடைப்பான். ஆனா, அவனுக்கு நேர்ந்த கதியைப் பாருங்க" என்றார்கள் கண்ணீரோடு.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!