வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (07/05/2018)

கடைசி தொடர்பு:13:55 (07/05/2018)

`நாங்க ரொம்ப பிஸி... குழாயைத் துணியை வச்சு அடைங்க' - அதிகாரியின் அலட்சிய பதிலால் வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்

அதிகாரிகளின் அலட்சியத்தால் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறிகொண்டிருப்பதாகப் பொதுமக்கள் புலம்பி வருகிறார்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள கள்ளப்பள்ளி, சிந்தலவாடி ஊராட்சிகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து போகும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்துதான் குடிநீர் வெளியேறுவதாக அந்தப் பகுதி மக்கள் புகார் கூறினார்கள். என்னதான் கரூர் மாவட்டத்தில் காவிரி ஓடினாலும், இந்த மாவட்டம் வறட்சியான மாவட்டம். சுண்ணாம்பு மண் நிறைந்த மாவட்டம். தமிழக அளவில் அதிக வெப்பம் வெளிப்படும் மாவட்டம். இங்கு ஏற்கெனவே பல ஊராட்சிகளில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அல்லாடி வருகிறார்கள். குடிநீர் கேட்டு தினம் தினம் மக்கள் காலி குடங்களோடு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சொற்பமாகக் கிடைக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிபண்ணாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், அளவு குடிநீர் வீணாகிக்கொண்டிருக்கிறது.

இதுபற்றி பேசிய சம்பந்தப்பட்ட பகுதி மக்கள், "ஒருவாரகாலமாகவே இப்படி குடிநீர் இங்கே வீணாகிக்கொண்டிருக்கிறது. 'இதைச் சரி பண்ணி கொடுங்க'ன்னு ஊராட்சி நிர்வாகங்கள், சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம்ன்னு பலர்கிட்டேயும் மனு கொடுத்து ஓய்ந்துவிட்டோம். 'இதோ சரி பண்றேன், அதோ சரி பண்றோம்'ன்னு சொன்னார்களேயொழிய, இதுவரை சரி பண்ணலை. ஓர் அதிகாரி, 'உடைஞ்ச பைப்பை சரி பண்றதுதான் எங்க வேலையா. நாங்க ரொம்ப பிஸி. நீங்களே கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைந்த இடத்தில் துணியை வச்சு அடைங்க. எங்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு'ன்னு தெனாவெட்டா பேசினார். இப்படி குழாய் உடைந்ததால்,தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. இரண்டு ஊராட்சிகளுக்கும் கொஞ்சம்போலதான் தண்ணீர் வருது. இதை உடனே அதிகாரிகள் சரி பண்ணனும். இல்லைன்னா,கடுமையான போராட்டங்கள் நடத்துவோம்" என்றார்கள் ஆக்ரோஷமாக!.