வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (07/05/2018)

கடைசி தொடர்பு:16:24 (07/05/2018)

நட்சத்திர ஹோட்டலில் 'ஸ்கெட்ச்' போட்ட ராக்கெட் ராஜா  - சென்னையில் சிக்கிய டீலிங் பின்னணி 

ராக்கெட் ராஜா

சென்னை நட்சத்திர ஹோட்டலில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவை இன்று அதிகாலை, போலீஸார் துப்பாக்கி முனையில் கைதுசெய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கிகள், பணம், அரிவாள், கத்தி ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், குமார். இவர், தற்போது பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியில் குடியிருந்துவருகிறார். கடந்த 27.2.2018ல் குமாரின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொடியன்குளம் குமாரைக் கொல்ல முயன்றனர். ஆனால் அவர் தப்பிவிட்டார். மர்ம நபர்களிடம் குமாரின் மருமகன் செந்தில்குமார் சிக்கிக்கொண்டார். அவரைக் வெட்டிக் கொலைசெய்துவிட்டு மர்மக்கும்பல் தப்பி ஓடியது. கொலையுண்ட செந்தில்குமார், எம்.இ முடித்துவிட்டு நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். 
 
 இதுதொடர்பாக ராக்கெட் ராஜா, அவரது சகோதரரும் வழக்கறிஞருமான பாலகணேசன், உறவினரான டாக்டர்.பாலமுருகன் உள்ளிட்ட 9 பேர்மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜாவைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

 யார் இந்த ராக்கெட்? 

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. நெல்லையில் கராத்தே செல்வின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்கவே ரவுடி சாம்ராஜ்ஜியத்தில் கால்பதித்தார். கராத்தே செல்வின் கொலை வழக்கில் தொடர்புடைய  கட்டத்துரையை நீண்ட காலத்துக்குப் பிறகு சென்னை எழும்பூரில் துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்த வழக்கு, ராக்கெட் ராஜா மீது பதிவுசெய்யப்பட்டது. அதன்பிறகு கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எந்தச் சம்பவத்தில் ஈடுபட்டாலும், வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுபவர் ராஜா. ராக்கெட் போல அவர் செயல்பட்டதால் அவரது  கூட்டாளிகள் ராக்கெட் ராஜா என்று அழைத்துள்ளனர். 
 
இதற்கிடையில், நாடார் மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். தொடர்ந்து, தான் சார்ந்த சமுதாயத்துக்காகப் பல கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.  பல வழக்குகளில் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜா மீது, சமீபத்தில் நெல்லைப் பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கிலும் சேர்க்கப்பட்டார். அந்த வழக்கில் தேடப்பட்ட ராக்கெட் ராஜா, இன்னொரு சம்பவத்துக்காக சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல், சென்னை போலீஸாருக்குக் கிடைத்தது. 
 

 ராக்கெட் ராஜா

அதிகாலையில் கைது 

 உடனடியாக, சென்னை தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையில் தனிப்படை போலீஸார், அந்த நட்சத்திர ஹோட்டலைச் சுற்றிவளைத்தனர். ராக்கெட் ராஜா பதுங்கியிருந்த அறைக்குச் சென்ற போலீஸார், துப்பாக்கி முனையில் அவரைக் கைதுசெய்தனர். அப்போது, அவர் போலீஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இருப்பினும், ராக்கெட் ராஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் 4  பேரையும் போலீஸார் அதிகாலையில் கைதுசெய்தனர்
அந்த அறையிலிருந்து நவீன ரக துப்பாக்கிகள், கத்தி, அரிவாள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்யத்தான் அங்கு ராக்கெட் ராஜா கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்ததாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

 இது, ராக்கெட் ராஜா ஸ்டைல் 

வழக்கமாக, ஒவ்வொரு ரவுடியும் ஒரு ஸ்டைலில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவார்கள். அதுபோல, ராக்கெட் ராஜாவின் ஸ்டைல் என்னவென்றால், எதிரியை நேருக்கு நேர் சந்திப்பார். அப்போது, ராக்கெட் ராஜாவின் துப்பாக்கிக் குண்டுகள் எதிரியின் நெஞ்சைத் துளைக்கும். அப்போது பொதுமக்கள் கூட்டம் கூடினால், வெடிகுண்டு வீசி தப்பிவிடுவதுதான் அவரது ஸ்டைல். 

 ராக்கெட் ராஜாவைப் பொறுத்தவரை, யாரையும் நம்ப மாட்டார். தனி ஒருவனாகவே காரியத்தில் களமிறங்குவார். அடிக்கடி கூட்டாளிகள் மாற்றப்படுவார்கள். தற்போதுகூட ராக்கெட் ராஜாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ள கூட்டாளிகளில் இருவர், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். 
 மற்றவர்கள், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ராக்கெட் ராஜா மீது நெல்லை, சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில்          20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். சென்னையில் கைதுசெய்யப்பட்ட ராக்கெட் ராஜாவிடம் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 காட்டிக்கொடுத்த எட்டப்பன் 

 ராக்கெட் ராஜா, சென்னையில் பதுங்கியிருந்த தகவல் பரம ரகசியமாக இருந்தது. அதை போலீஸார் மோப்பம்பிடித்தது தனிக்கதை என்கின்றனர் உள்விவர வட்டாரங்கள். ஒரு டீலிங் தொடர்பாக ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் சென்னைக்கு வந்துள்ளனர். நேற்றிரவு அந்த டீலிங் நடந்துள்ளது. அப்போது, டீலிங் தோல்வியடைந்துள்ளது. அந்த டீலிங்கில் பங்கேற்ற ஒருவர்தான் போலீஸாருக்கு ரகசியமாகத் தகவல் கொடுத்தாகச் சொல்லப்படுகிறது. போலீஸார் வருவதற்கு இன்னும் சில மணி நேரம் தாமதமாகியிருந்தால், கூட்டாளிகளுடன் ராக்கெட் ராஜா தப்பியிருப்பார் என்று சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.