`நீட் தேர்வை சி.பி.எஸ்.சி நடத்தக் கூடாது’ - திருமாவளவன் வலியுறுத்தல்

"தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்தது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளைச் சோதனை என்ற பெயரில் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள்போல, தலைமுடி முதல் உள்ளாடை வரை சோதனை செய்துள்ளது மிகவும் வெட்கக்கேடானது. மருத்துவம் படிக்க நுழைவுத்தேர்வு எழுதுவதில் இவ்வளவு கேவலத்தை எதிர்கொள்ள வேண்டியதை நினைத்து மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்கபட்டிக்கும்போது இந்த ஆண்டு மட்டும் வெளி மாநிலத்தில் மையம் ஒதுக்க வேண்டிய காரணம் என்ன? நீட் தேர்வு மையங்கள் வெளி மாநிலத்தில் ஒதுக்கப்பட்டதற்கு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளிட வேண்டும்.

மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை உயிரிழப்புக்கு மத்திய, மாநில அரசுகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே விலக்கு அளிக்க வேண்டும். விலக்கு அளிக்கப்படும் வரையில், இத் தேர்வு நடத்தும் பொறுப்பை சி.பி.எஸ்.இ-யிடமிருந்து எடுத்து, மாநிலக் கல்வி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் மக்களின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுக்க வேண்டும்.

நெல்லை மாவட்டம், விஜயநாராயணம் அருகே மணல் கொள்ளை நடப்பதாக வந்த தகவலைத்தொடர்ந்து அங்கு விசாரிக்கச் சென்ற சிறப்பு பிரிவு காவலர் ஜெகதீசன் தலையில் படுகாயத்துடன் உயிரிழப்பு சம்பவத்துக்கு தமிழக அரசே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஆற்றுப்படுகைகளில் இதுபோன்ற மணல் கொள்ளைகள் நடக்காது. காவலரின் கொலைச் சம்பவத்தின் பின்புலத்தில் உள்ள மணல் மாஃபியா கும்பலைக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். குடும்பத்துக்கு ரூ.1 கோடி அரசு நிவாரணத் தொகை வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!