வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (07/05/2018)

கடைசி தொடர்பு:15:20 (07/05/2018)

சி.பி.எஸ்.இ அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் #NEET

நீட் தேர்வு மற்றும் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மரணத்துக்குக் கண்டனம் தெரிவித்து, சென்னை சி.பி.எஸ்.இ அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.  

நீட்

நேற்று, நாடு முழுவதும் மருத்துவப் படிப்பின் நுழைவுத்தேர்வான நீட் நடைபெற்றது. நீட் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒவ்வொரு வருடமும் பல பிரச்னை, சிக்கல்கள் எனத் தொடர்ந்து நடந்துகொண்டே வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், கடந்த ஆண்டை விடப் பெரிய பிரச்னைகள் நிகழ்துள்ளன. தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. சேலத்தில் ஒரு மாணவிக்கு அளிக்கப்பட்டிருந்த ஹால் டிக்கெட்டில் இரண்டு தேர்வு மையங்கள் இருந்ததால், அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. திருவாரூரைச் சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம், நீட் தேர்வுக்காகத் தன் தந்தையுடன் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் சென்றிருந்தார். அங்கு, தந்தை கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவர் எர்ணாகுளத்திலேயே உயிரிழந்தார். மதுரையில் தேர்வு எழுதிய 120  மாணவர்களுக்கு ஹிந்தியில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. பிறகு அதை மாற்றி, மதியம் 2 மணிக்கு மேல் அந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆடை கட்டுப்பாடு என்ற பெயரில் பல பகுதிகளில் மாணவிகளை மிகுந்த சோதனைக்கு உள்ளாக்கிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இது ஒரு பக்கம் இருக்க, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ பாடத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தொடரும் புகார்களும் இருக்கின்றன. இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி, ஒருவழியாக நீட் தேர்வு நேற்று நடந்துமுடிந்துள்ளது. 

இந்நிலையில், நீட் மன உலைச்சலால்தான் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை இறந்தார் என்றும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை ரத்துசெய்யக்கோரியும், இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது. பிறகு, போராட்டக்காரர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று காவல்துறையினர் கைதுசெய்தனர்.