பள்ளி வாகனத்தில் மணல் கடத்தல்! பட்டப்பகலில் நடக்கும் கொள்ளை | Sand smuggling in School vehicle

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (07/05/2018)

கடைசி தொடர்பு:16:15 (07/05/2018)

பள்ளி வாகனத்தில் மணல் கடத்தல்! பட்டப்பகலில் நடக்கும் கொள்ளை

பட்டப்பகலில் கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரியில் தங்களது பள்ளி வேனில் மணல் கடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது புஞ்சை புகழூர். இந்தக் கிராமத்தில் ஓடும் காவிரியாற்றில் இரவும் பகலுமாக மணல் கொள்ளை நடப்பதாக மக்கள் புகார் கூறி வந்தார்கள். ''பல அடி ஆழத்துக்கு பொக்லைன் இயந்திரத்தை வைத்து லாரிகளில் மணல் கடத்துவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதைதவிர, நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளிலும் இங்கே மணல் கடத்துகிறார்கள். அதோடு, காவிரி ஆற்றுக்குள் ஆட்களை வைத்து, ஆளுங்கட்சிப் புள்ளிகள் சிலர் சாக்கு மூட்டைகளில் மணலை அள்ளி, அவற்றை மூட்டை ஒன்று ஆயிரம் ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். இப்படி கணக்கு வழக்கில்லாமல் இந்தப் பகுதியில் மணல் கடத்தல் நடப்பதால், இந்தப் பகுதியில் ஆற்றுக்குள்ளேயே நிலத்தடி நீர் மட்டம் 300 அடிகள் வரை போய்விட்டது'' என மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதனால், குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுவதாகவும் அவர்கள் கண்ணைக் கசக்குகிறார்கள்.

இந்த நிலையில், புஞ்சை புகழூர் பகுதியில் காவிரி ஆற்றில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வேனில் காவிரி ஆற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளிக் கடத்துகிறார்கள். இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர் ஒருவர், "ஆளுங்கட்சிப் புள்ளிகள் இந்தப் பகுதி காவிரியில் களிமண் தெரியும் அளவுக்கு மணலை அள்ளி கடத்தி, கோடி கோடியாக சம்பாதித்துவிட்டார்கள். இது போதாதென்று, இப்போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம் ஒன்று ஆட்களை வைத்து, மணலை சாக்குகளில் அள்ளி கட்டிவைத்து, அதைப் பள்ளி வாகனத்திலேயே பட்டப்பகலில் துணிச்சலாக ஏற்றிக் கடத்துகிறது. பள்ளியில் கட்டட வேலைகள் நடப்பதால் தொடர்ந்து அந்தப் பள்ளி வாகனத்தில் பள்ளி நிர்வாகம் மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து கரூர் மாவட்ட எல்லையில் மணல் கடத்துகிறது. இதை மாவட்ட நிர்வாகம் தட்டிக் கேட்க வேண்டும்" என்றார்.

இது சம்பந்தமாக தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்திடம் பேசினோம்.  "நாங்கள் காவிரியில் மணல் கடத்தவில்லை. காசு கொடுத்து மணல் வாங்கினோம். வாரக்கணக்கில் எல்லாம் மணல் அள்ளவில்லை. அங்குள்ள ஒரு நபரிடம் சில மூட்டைகள் மட்டுமே வாங்கினோம். நாங்கள் எப்படி மணல் கடத்துவோம்?" என்று நம்மிடமே கேட்டார்கள்.