நீட் தேர்வுக்கு மகளை அழைத்துவந்த தந்தை உயிரிழப்பு! புதுச்சேரியில் நடந்த சோகம்

நீட் தேர்வெழுத மகளை புதுச்சேரிக்கு அழைத்துவந்த தந்தை, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட்

நீட் தேர்வெழுத மகனை கேரளாவுக்கு அழைத்துச்சென்ற திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்பா வெளியில் இறந்துவிட, மகன் எதுவுமே தெரியாமல் உள்ளே நீட் தேர்வு எழுதிய சம்பவத்தால் தமிழகமே கொந்தளித்தது. கிருஷ்ணசாமியின் மரணத்தில் ஈரம்கூட காயாத நிலையில், நீட் தேர்வுக்காக மகளை அழைத்து வந்த இன்னொரு தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் நேற்று, 12 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. அதில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர் கலந்துகொண்டு தேர்வுகளை எழுதினர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அங்குசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 50). மேல்மருவத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். தனது மகள் சுவாதி, நீட் தேர்வை எழுதுவதற்காக மனைவி அமுதா மற்றும் மற்றொரு மகளுடன் புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் உள்ள சாரதா கங்காதரன் கல்லூரிக்கு அழைத்துவந்தார். தேர்வை எழுத மாணவி சுவாதி உள்ளே சென்றபோது சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும், நெஞ்சு வலிப்பதாகக் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், ஆட்டோ மூலம்  புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!