`இறந்தவர்களுக்குக் காரியம் செய்யும் கொட்டகைகளில் வெற்றிலை வியாபாரம்'- வேதனையில் வியாபாரிகள் | These merchents dont have place to sell their products

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (07/05/2018)

கடைசி தொடர்பு:16:50 (07/05/2018)

`இறந்தவர்களுக்குக் காரியம் செய்யும் கொட்டகைகளில் வெற்றிலை வியாபாரம்'- வேதனையில் வியாபாரிகள்

``எங்களுக்கு வெற்றிலை சந்தை அமைத்து தராததால், நாங்க இறந்தவர்களுக்குக் காரியம் செய்யும் கொட்டகையில் அமர்ந்து வெற்றிலை வியாபாரம் பார்க்கிறோம்" என்று லாலாப்பேட்டை பகுதி வெற்றிலை வியாபாரிகள் வேதனையுடன் கூறினர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கிறது லாலாப்பேட்டை. இந்த கிராமம் மட்டுமன்றி, அருகில் உள்ள சிந்தலவாடி, கள்ளப்பள்ளி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 300 க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் வெற்றிலை சாகுபடி நடக்கிறது. லாலாப்பேட்டை கொழுந்து வெற்றிலை என்றால், தமிழக அளவில் ஏக பிரசித்தம். இந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளும், ஐம்பதுக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் இந்த வெற்றிலை சாகுபடியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். ஆனால், வெற்றிலை இங்கே நன்றாக விளைந்தாலும், அவற்றை வியாபாரம் செய்ய சந்தை இல்லாமல் பல வருடங்களாக விவசாயிகளும்,வியாபாரிகளும் அல்லாடி வருகிறார்கள். இதனால், லாலாப்பேட்டை கரூர் பைபாஸ் அருகே உள்ள இறந்தவர்களுக்குக் காரியம் செய்யும் கொட்டகைகளில் வெற்றிலையை விவசாயிகளிடம் வாங்கும், வியாபாரிகள் அவற்றை அங்கேயே அமர்ந்து கட்டுக் கட்டாகப் பிரித்து, வெளியூர்களுக்கு அனுப்புகிறார்கள்.


 வெற்றிலை வியாபாரம்

இதுபற்றி, நம்மிடம் பேசிய வெற்றிலை வியாபாரிகள், ``இங்கே நல்லா வெற்றிலை விவசாயம் நடக்குது. ஆனால், அவற்றை விற்பனை செய்யவோ, உட்கார்ந்து அடுக்கவோ ஒரு சந்தையை அமைத்து தாங்க'ன்னு ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம்ன்னு பல தரப்புக்கும் கடந்த ஐம்பது வருடங்களாக மனு அனுப்பிட்டோம். ஆனால், `போதிய இட வசதி இல்லை'ன்னு எல்லோரும் மறுத்துக்கிட்டே வர்றாங்க. இதனால், இந்த இறந்தவர்களுக்குக் காரியம் செய்யும் கொட்டகைகளிலேயே விவசாயிகளிடமிருந்து வெற்றிலையை வாங்கி, இங்கேயே அமர்ந்து தனித்தனியாக அடுக்கி, தமிழகத்தில் பல ஊர்களுக்கும் அனுப்ப வேண்டி இருக்கு. காரியம் செய்யும் கொட்டகைகளில் அமர்ந்து  வெற்றிலையை அடுக்குவதே எங்களுக்கு ஒருமாதிரி இருக்கு. மாவட்ட நிர்வாகம் விரைவாக எங்களுக்கு வெற்றிலை மார்க்கெட் கட்டித் தரணும்" என்றார்கள்.