வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (07/05/2018)

கடைசி தொடர்பு:17:45 (07/05/2018)

`நிர்ணயித்தது ரூ.375 ; கொடுப்பது ரூ.250' - பொங்கிய ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பணியாளர்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பண்ணை தினக் கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பூங்கா வளாகத்தில் கடந்த 4 நாள்களாகத் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பண்ணை தினக் கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பூங்கா வளாகத்தில் கடந்த 4 நாள்களாகத் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் போலீஸ் எஸ்.பி முரளி ரம்பா ஆகியோர் பூங்காவுக்கு வந்தனர். அவர்களுடன் ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் ஆறுமுகம், சி.பி.ஐ மாநிலக் குழு உறுப்பினர் பெல்லி மற்றும் மாவட்டச் செயலாளர் போஜராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினக் கூலி அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பண்ணையில் பணியாற்றி வருகின்றனர். இப்பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சம்பளம் ரூ.375 வழங்கப்படாமல், கடந்த 3 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ரூ.250 மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது.

அதுபோல, ஆண்டுக்கு 240 நாள்களுக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வேலை செய்பவர்களை நிரந்தர ஊழியர்களாக்க வேண்டும். ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்பவர்கள்கூட இதுவரை நிரந்தரம் செய்யவில்லை. இது குறித்து கலெக்டரிடம் பேசுகையில், பணியாளர்களுக்கு வழங்கப்படும் கூலி மிகக்குறைவு என்பதை உணர்கிறேன். இப்பிரச்னை தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்கிறேன். பணி நிரந்தரம் குறித்து தோட்டக்கலைத் துறைதான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். தமிழக அரசு 1981-ம் ஆண்டு தொழில் நிறுவனங்கள் பணி நிரந்தரப்படுத்தும் சட்டம் இயற்றியிருக்கிறது. அதன்படி இரண்டு ஆண்டுகளில் 480 நாள்கள் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அரசு, 20 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருபவர்களை நிரந்தரம் செய்யாதது, அரசு போட்ட உத்தரவை அரசாங்கமே மீறுவது நகைப்புக்குறியதாக உள்ளது. பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு செய்யப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்'' என்றனர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க