வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (07/05/2018)

கடைசி தொடர்பு:15:54 (07/05/2018)

`கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்துங்கள்' - நாயிடம் மனு கொடுத்த தி.மு.க-வினர்

கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்தக்கோரி தி.மு.க-வினர் நாயிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க-வினர் வெற்றி பெறுவதற்காக ஓட்டுப்பெட்டிகள் உடைப்பு, தேர்தல் ஆவணங்களுக்குத் தீ வைப்பு, அதிகாரிகளைத் தாக்குவது எனத் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதைக் கண்டித்து தி.மு.க-வினர் பல்வேறு கட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்துங்கள்'- நாயிடம் மனுத் கொடுத்த திமுகவினர்

பெரம்பலூர் மாவட்டத்திலும் 4 கட்டங்களாகக் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கூட்டுறவுச் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறவில்லை. எனவே கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்தக்கோரி தி.மு.க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 2 வது நாளாகப் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் கூடி, அங்கு அ.தி.மு.க-வினருக்குத் துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு திரிந்துகொண்டிருந்த நாயிடம் கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தி.மு.க-வினரிடம் பேசியபோது, "நாங்கள் தொடர்ந்து இரண்டு, மூன்று நாள்களாகப் போராட்டம் நடத்திவருகிறோம். பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்படும் என்று தேர்தல் அலுவலர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக கூட்டுறவுச் சங்க அலுவலகத்துக்கு வந்தோம். ஆனால், அலுவலர்கள் யாரும் இல்லை. எனவே, இதைக் கண்டித்தும் தேர்தலை முறையாக நடத்தக் கோரியும் நாயிடம் மனு கொடுத்தோம். நாய் நன்றியுள்ள பிராணி விசுவாசமாக நேர்மையாக நடந்துகொள்ளும். ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகளும் அதிகாரிகள் சரியாக நடந்துகொள்வதில்லை" என்று குற்றம்சாட்டினார்கள். 

அதேபோல் லாடபுரத்தில் பால் கூட்டுறவு சங்கத்துக்கு முறையாகத் தேர்தலை நடத்தக்கோரி சங்க அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர்.