வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (07/05/2018)

கடைசி தொடர்பு:16:08 (07/05/2018)

`ஸ்கெட்ச் போட்டது சுந்தருக்கு... சிக்கியது ராக்கெட் ராஜா’ - ஆபரேஷனை விளக்கும் போலீஸ் 

ராக்கெட் ராஜா

சென்னை நட்சத்திர ஹோட்டலில் ராக்கெட் ராஜாவின் நண்பர் சுந்தர் இருப்பதாகத்தான் தனிப்படை போலீஸாருக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்றபோதுதான் ராக்கெட்ராஜாவும் அதே ஹோட்டலில் தங்கியிருந்தது தெரியவந்தது. அதன் பிறகே ராக்கெட் ராஜா உட்பட அவரின் கூட்டாளிகளைப் போலீஸார் கைதுசெய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்லை மாவட்டம், திசையன்விளை, ஆனைக்குடியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. பிரபல ரவுடியான இவரை போலீஸார் தேடிவந்தனர். சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் நடந்த பேராசிரியர் செந்தில்குமார் வழக்கிலும் இவரைத் தேடினர். ஆனால், போலீஸூக்குப் பிடிகொடுக்காமல் தலைமறைவாகவே இருந்துவந்தார். இந்தச் சமயத்தில் ராக்கெட் ராஜாவின் நண்பரான நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுந்தர், தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாகத்
தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது.

உடனடியாகப் போலீஸ் டீம் அங்கு சென்றது. அப்போது, சுந்தரின் அறைக்குச் சென்ற போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போதுதான் ராக்கெட் ராஜாவும் அதே ஹோட்டலில் தங்கியிருந்த தகவல் போலீஸாருக்குத் தெரியவந்ததாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சுந்தர் மீது மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்பேரில் அவரைத் தேடிவந்தோம். சுந்தரைப் பிடித்தால் ராக்கெட் ராஜா குறித்த தகவல் கிடைக்கும் என்று கருதினோம். அப்போதுதான் சுந்தர் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. வி.வி.ஐ.பி ஒருவரின் பெயரில் அந்த ஹோட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்று சுந்தரை மடக்கிப்பிடித்தபோதுதான் ஒன்பதாவது மாடியில் உள்ள சொகுசு அறையில் ராக்கெட் ராஜா மட்டும் தனியாக ஓர் அறையில் தங்கியிருக்கும் தகவல் தெரியவந்தது.

உடனடியாகக் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ஆபரேஷன் ஆர் என்று பெயரிட்டு ஹோட்டலை எங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம். பிறகு, 9 வது மாடியில் ராக்கெட் ராஜா தங்கியிருந்த அறையை நாங்கள் சுற்றி வளைத்தோம். எந்த வழியிலும் அவர் தப்பிச் செல்லாமலிருக்க கார் பார்க்கிங் பகுதியிலும் ஹோட்டலின் வாசல் பகுதியிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். ராக்கெட் ராஜாவின் அறைக் கதவை இன்ஸ்பெக்டர் ஒருவர் தட்டினார். அவருக்குப் பின்னால் துப்பாக்கியோடு போலீஸார் காத்திருந்தனர்.

கதவைத் திறந்த ராக்கெட் ராஜாவை துப்பாக்கி முனையில் போலீஸார் எச்சரித்தனர். அப்போது, சரணடைவதாக ராக்கெட் ராஜா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம். தொடர்ந்து ராக்கெட் ராஜா தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினோம். அங்கிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர். 

 ராக்கெட் ராஜாவிடம் போலீஸார் விசாரித்தபோது, நெல்லை கொலை வழக்கில் ஜாமீன் பெறத்தான் சென்னைக்கு வந்ததாகவும். சென்னையில் உள்ள வழக்கறிஞரைச் சந்திக்க செல்ல புறப்பட்டபோதுதான் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். ராக்கெட் ராஜாவுடன் பிடிபட்ட சுந்தர், பிரகாஷ், நந்தகுமார், ராஜ்சுந்தர் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணை முடிந்ததும் நெல்லை போலீஸாரிடம் ராக்கெட் ராஜா ஒப்படைக்கப்படவுள்ளதாகப் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.