வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (07/05/2018)

கடைசி தொடர்பு:16:31 (07/05/2018)

கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர் மீது தாக்குதல்!

மதுரை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த கிராமத்துப் பெரியவரை  வருவாய்த்துறை அதிகாரிகள் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுதும் மக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடக்கும். இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க மாவட்டம் முழுவதுமிருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர். நிலப்பிரச்னை சம்பந்தமாக மனு கொடுக்க உசிலம்பட்டி அருகே கோவிலாங்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் வந்திருந்தார். அவர் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிகவும் நொந்துபோன மன நிலையிலிருந்தவரிடம் என்ன நடந்தது என்று பேசினோம்.

கலெக்டரிடம் மனு

``என் நிலப்பிரச்னை சம்பந்தமாக கலெக்டரிடம் மனு கொடுக்க காலையிலிருந்து வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது சில அதிகாரிகள் தள்ளி நில்லு, தள்ளி நில்லு என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்த ஆம்பள, பொம்பள எல்லோரையும் பிடித்துத் தள்ளினார்கள். நாங்களே கால் வலிக்க ரொம்ப நேரமா நிக்குறோம், ஏன் இப்படித் தள்ளி விடுறீங்க. வயசான பொம்பளைங்க கீழே விழுந்துடப் போறாங்க...என்றுதான் சொன்னேன். அவ்வளவுதான், உடனே அங்கே இன்னும் சில அதிகாரிகள் வந்தனர். என்னடா ஓவராப்பேசுறே என்று என்னைத் தாக்கினார்கள். என் கையைப் பிடித்து இழுத்ததில் கையில் கட்டியிருந்த சாமி கயிறு அறுந்து ரத்தம் வந்தது. அங்கிருந்த போலீஸ்காரர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை மிரட்டினார்கள். மனு கொடுக்க வந்தது குத்தாமா. இவ்வளவுக்கும் அந்த அதிகாரிகளுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை" என்று உடைந்து போய் கூறினார்.

நாம் உடனே அவரை அழைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் மனு வாங்கிக் கொண்டிருந்த கலெக்டர் வீரராகவ ராவிடம் முறையிட்டோம்.  பொறுமையாகக் கேட்டுக்கொண்ட கலெக்டர், உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றவர், பாதிக்கப்பட்ட கிராமத்துக்காரர் ராஜாவிடம் தனியாக அழைத்து விசாரித்தார். ``பாதிக்கப்பட்டு அதற்கு உதவி கேட்டுத்தான் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு கொடுக்க வருகிறார்கள். அப்படி வருகிறவர்களை எந்தக் காரணமுமில்லாமல் அதிகாரிகளே தாக்குவது, அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம்" என்று அங்கு வந்திருந்த பொதுமக்கள் கூறினார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க