வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (07/05/2018)

கடைசி தொடர்பு:18:05 (07/05/2018)

`முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம்' - மனு கொடுத்து கலெக்டரை அதிரவைத்த கம்யூனிஸ்ட்

கோவில்பட்டிக்கு வரும் முதலமைச்சர் பழனிசாமிக்கு அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில், கறுப்புக்கொடி காட்ட இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

communist party pettition to collector

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க 11-ம் தேதி வரும் முதலமைச்சருக்கு, எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் கறுப்புக்கொடி காட்டுவது என இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ’திட்டப்பணிகள் முடிவடைந்துவிட்டது எனவும் தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன் அரைவேக்காட்டுத் தனமாகப் பேசி வருகிறார்’ எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘என்னை அரைவேக்காடு எனக் கூறியதை அமைச்சர் கடம்பூர் ராஜு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க மகளிரணியினர் அவர் மீது கல்லெறியில் ஈடுபடுவார்கள்’ எனத் தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ கீதாஜீவன் பதிலடி கொடுத்தார். அடுத்த நாளே, ‘தி.மு.க ஆட்சிக் காலத்தில் கீதாஜீவன் அமைச்சராக இருந்தபோது என்ன குடிநீர் திட்டம் கொண்டு வந்தார். அவருக்கு என்ன தெரியும்? சரித்திரம் தெரியாமல் பேசி வருகிறார்’ என அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன்  தெரிவித்தார். இவ்வாறு, தி.மு.கவும் அ.தி.மு.க-வும் மல்லுக்கட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்ட இருக்கும் தகவலைத் தெரிவிக்கும் வகையில் ஆட்சியரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அழகுமுத்துப் பாண்டியன், “தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய நகராட்சி கோவில்பட்டி. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், சீவலப்பேரி தாமிரபரணியிலிருந்து உறைகிணறுகள் மூலமாகத் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, கோவில்பட்டிக்கு பைப்லைன் மூலம் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட உள்ளது.

18 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய கோவில்பட்டி மக்களின் இந்த நீண்டகால கனவுத்திட்டத்தை, அரசின் தவறான அணுகுமுறையால்  5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. நகராட்சிப் பகுதிகளில் 84 கி.மீட்டர் பரப்பளவுக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 10 மேல் நிலைத் தொட்டிகளில் 3 தொட்டிகள் கட்டும் பணி தொடங்கப்பட வில்லை. இவ்வாறு  திட்டப்பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் , இத்திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க வருகிறார்கள்.  இதில், மக்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் முதல்வருக்கு அனைத்து எதிர்க்கட்சியினர் இணைந்து கறுப்புக்கொடி காட்ட இருக்கிறோம்” என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க