வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (07/05/2018)

கடைசி தொடர்பு:16:39 (07/05/2018)

"கொலை குற்றவாளிகளைப் போல ஆசிரியர்கள் மிரட்டி கைது செய்யப்படுகின்றனர்!" அரசு ஊழியர் சங்க நிர்வாகி

நாளை (மே - 8) ஒரு லட்சம் அரசு ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடப் போகிறார்கள் எனும் அறிவிப்பு ஆளும் அரசைக் கடுமையாக உலுக்கியிருக்கிறது. அந்த முற்றுகைப்போராட்டத்தை நிறுத்தவோ, நீர்த்துப்போகச் செய்யவோ தனது நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறது. வாட்ஸ் அப், முகநூல் வழியாக அரசு ஊழியர்களை ஒருங்கிணைக்கும் பணிகளைச் சங்க நிர்வாகிகள் மும்முரமாகச் செய்துவருகின்றனர். 

ஆசிரியர்

நாளைய போராட்டம் குறித்து ஜாக்டோ - ஜியோ சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மு.அன்பரசுவிடம் பேசினோம்.

"எங்களின் போராட்டம் பற்றிச் சொல்வதற்கு முன், எங்களின் முதன்மையான நான்கு கோரிக்கைகளைச் சொல்லிவிடுகிறேன். ஒன்று,  CPS திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இரண்டாவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி! ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் அமல்படுத்துதல். மூன்றாவது, சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், மற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதியம், கணினி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். நான்காவதாக, 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் ரொக்கமாக வழங்கிட வேண்டும்.

அன்பரசு இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில்தான் நாங்கள் போராட்டத்துக்கு அழைப்புக்கொடுத்தோம். வழக்கமாக இப்படியான போராட்ட அறிவிப்புக்குப் பின் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். ஆனால், இப்போதைய அரசு அதற்கும் முன் வரவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 - விதியின் கீழ் அறிவித்ததைக் கூட இப்போது ஆள்பவர்கள் செய்வற்குத் தயாராக இல்லை. இதற்கென, 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அமைக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை இன்னும் கொடுத்தபாடில்லை. 21 மாத அரியர் தொகையை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தவர்கள், எங்களுக்குக் கொடுக்க வில்லை. அவர்களோடு ஒப்பிடும்போது எங்களுக்கான தொகை குறைவுதான். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அமைச்சர்களோடு நடத்திய பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டாததால் முதல் அமைச்சரோடு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். ஆனால், அவர், 'விவசாய பஞ்சத்தைப் பாருங்க, நிதிநிலையைப் பாருங்க' என்பதாகப் பேசினார். நிதி நிலைமை சிக்கலில் இருக்கிறது என்றால், எம்.எல்.ஏக்களுக்கு இவ்வளவு ஊதிய உயர்வு அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினோம். அந்தப் பேச்சு வார்த்தையும் எங்களுக்குத் திருப்தி தருவதாக இல்லை. எவ்வளவு நாள்கள்தான் காத்திருப்பது. அதனால்தான் 114 அமைப்புகள் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்பட்சத்தில் 12 லட்சத்துக்கும் மேல் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை இந்த அரசு முன்னெடுப்பதற்குப் பதில், தமிழ்நாடு எங்கிலும் ஆசிரியர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆசிரியர்கள் என்றும் பாராமல் கொலை குற்றவாளிகளைப் போல மிரட்டி கைது செய்யப்படுகின்றனர். வீட்டில் உள்ள குழந்தைகளையும் மிரட்டுகின்றனர். இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இப்போதும் காலமிருக்கிறது. அரசு சங்கங்களோடு பேசுவதற்குத் தயாராக வேண்டும். இல்லையெனில், திட்டமிட்டபடி நாளை எண்ணற்ற அரசு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிடுவோம். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடர் போராட்டத்தையும் நடத்துவோம்" என்கிறார் ஆவேசத்துடன். 

ஆசிரியர்

ஆசிரியர், அரசு ஊழியர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை சிஐடியூ தலைவர் அ.செளந்தரராஜன் கடுமையாகக் கண்டத்தைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்க தயங்கிய முன்னெச்சரிக்கை கைது அணுகுமுறையை  மீண்டும் உயிர்ப்பிக்க எடப்பாடி அரசு  துணிந்துள்ளதற்கு தமிழக உழைப்பாளி மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கை செய்கிறோம். தமிழக அரசு தரப்பில் அமைச்சர் ஜெயகுமார், அரசுக்கு வரும் வருவாயில் 70 சதமானம் அரசு ஊழியருக்குச் செலவிடப்படுவதாக உண்மைக்குப் புறம்பான கருத்தை  அரசு செலவிலேயே விளம்பரமாகக்கொடுத்துள்ளார். இது பிரச்னையைத் திசைதிருப்பும்  மோசமான செயலாகும். தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அரசின் அடக்குமுறையை மீறிப் போராடும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குத் தமிழக தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் முழு ஆதரவை சிஐடியு தெரிவித்துக்கொள்கிறது. தமிழக அரசு தனது தவறான அணுகுமுறையைக் கைவிட்டு, போராடும் தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணவும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் கைது நடவடிக்கையைக் கண்டித்து, சமூக ஊடகங்களில் சக ஆசிரியர்கள் தங்களின் எதிர்ப்புகளைப் பதிவுசெய்துவருகின்றனர். ஆசிரியர்களுக்கான வாட்ஸ் அப் குரூப்களில் இது குறித்த உரையாடல்களே நடக்கின்றன. சில பகுதிகளில் கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி துண்டறிக்கைகளை அடித்து விநியோத்தும் வருகின்றனர். 


டிரெண்டிங் @ விகடன்