வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (07/05/2018)

கடைசி தொடர்பு:18:40 (07/05/2018)

`2 மாத சம்பளத்தை தாருங்கள்' - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பணியாளர்கள்

 ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்களுக்கு 2 மாதங்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுப் பணியாளர்களுக்கு 2 மாதங்கள் சம்பளம் வழங்காததைக் கண்டித்து ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு தொழிலாளர்கள்

ராமேஸ்வரம் நகராட்சியில் 21 வார்டு பகுதிகள் உள்ளன. இதில் பிரதான பகுதி வார்டுகளைத் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் மூலம் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. காரைக்குடியைச் சேர்ந்த எம்.கே.எம் என்ற தனியார் நிறுவனத்தினர் இதற்கான ஒப்பந்தத்தை நகராட்சி நிர்வாகத்திடமிருந்து பெற்றுள்ளனர். இதையடுத்து சுமார் 90 சுகாதார பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ரூ.200 என நிர்ணயம் செய்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்துடன் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் போடப்படாத நிலையில் அந்தத் தனியார் நிறுவனமே கடந்த 5 மாதங்களாகச் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்த தினக் கூலி பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் 2 மாத சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி துப்புரவுப் பணியாளர்கள் இன்று ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். நகராட்சி ஆணையாளர் வெளியூர் சென்றுவிட்டதால் மாலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக நகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.