வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (07/05/2018)

கடைசி தொடர்பு:19:55 (07/05/2018)

`இப்படி சுத்தவிடுறாங்க' - போலீஸூக்கு எதிராகக் கொந்தளிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

தங்கத் தமிழ்ச்செல்வன்

அ.ம.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நியூட்ரினோ எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் பொட்டிபுரம் அருகே உள்ள டி.புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்நிலையில் நம்மிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ``இந்த நியூட்ரினோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த நாங்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தோம். போலீஸார் எங்களுக்கு அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல், இன்ஸ்பெக்டரை பாருங்கள், டி.எஸ்.பி’யைப் பாருங்கள், எஸ்.பி’யைப் பாருங்கள் என அலைக்கழித்தனர். கடைசியாக கலெக்டரைப் பாருங்கள் என்றனர். கலெக்டரைப் பார்த்தால் நீங்கள் போலீஸாரிடம் அனுமதி கோருங்கள் என்கிறார். இப்படி சுத்தவிட்டு கடைசியில் அனுமதி இல்லை என்றார்கள். பின்னர், நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்’’ என்றார்.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், ``உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிமீது நான் மரியாதை வைத்திருக்கிறேன். எங்களது வழக்குக்கான தீர்ப்பை வழங்காமல், பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தீர்ப்பை வழங்கியது ஏமாற்றமளிக்கிறது. எங்கள் 18 பேரின் தொகுதி காலியாக இருக்கிறது. எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்ய முடியவில்லை. இனியும் நாங்கள் நீதிமன்றத்தை நம்ப தயாராக இல்லை. தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்தாலும் மேல்முறையீடு செல்ல மாட்டேன். இடைத்தேர்தல் வரட்டும். மக்களை நேரில் சந்தித்து வெற்றி பெறுவோம்'' என்றார்.