``புதுச்சேரியைப் பற்றி இன்னும் 10 ஆயிரம் பக்கங்கள் எழுதுவேன்!’’ - எழுத்தாளர் பிரபஞ்சன்

``இனி என் பெரும்பாலான வாழ்க்கையை புதுச்சேரியிலேயே அமைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறேன்” என்று அறிவித்திருக்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

``புதுச்சேரியைப் பற்றி இன்னும் 10 ஆயிரம் பக்கங்கள் எழுதுவேன்!’’ - எழுத்தாளர் பிரபஞ்சன்

பண்பாட்டுக் காவலர்களாக விளங்கும் எழுத்தாளர்களை ஆவணப்படுத்துவதும் போற்றுவதும் சமூகத்தின் தவிர்க்க இயலாத கடமைகளில் ஒன்று. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படியான நிகழ்வுகள் அரிதினும் அரிதாகவே நம் தேசத்தில் அரங்கேறுவது மிகப்பெரிய முரண். எழுத்தாளர்களும் கலைஞர்களும், வாழும் காலத்திலேயே கொண்டாடப்படவேண்டியவர்கள். காரணம், ஓர் இனத்தில் பண்பாட்டுச் செழுமையை மீட்டெடுத்து, அதை ஆவணப்படுத்தி சமூகத்துக்குக் கைகொடுப்பவர்கள் இவர்களே. அப்படி, தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் பிரபஞ்சன்.

பிரபஞ்சனின் `மானுடம் வெல்லும்’ `வானம் வசப்படும்’ போன்ற படைப்புகள் வரலாறு சார்ந்த நாவல்களுக்கான அகராதிகள். தமிழ் அறிவுச் சூழலின் சமகாலச் சரித்திரமாகத் திகழும் பிரபஞ்சன், புதுச்சேரியைப் பூர்வீகமாகக்கொண்டவர். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி பிறந்த இவர், 1961-ம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். இவரது வரலாற்றுப் புதினமான `வானம் வசப்படும்’ நாவல், 1995-ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. தனது வரலாற்று நாவல்களின் மூலம் புதுச்சேரி வரலாற்றை உலக அரங்குக்கு எடுத்துச் சென்றவர் பிரபஞ்சன். அரசியல், பண்பாடு, மதம் என இதுவரை இவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 86.

பிரபஞ்சன்

மண்ணின் மைந்தனான இவரை, உள்ளங்கையில் ஏந்தி உச்சி முகர்ந்திருக்கிறது புதுச்சேரி மாநிலம். தாமதம்தான் என்றாலும் வரலாற்றுக் கல்வெட்டுகளில் பொறிக்கப்படும் அளவுக்குப் புதுச்சேரி அரசால் கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆம்... கடந்த 3-ம் தேதி புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத் துறையின் சார்பாக பிரபஞ்சனின் 57 ஆண்டு இலக்கியப் பணிக்காக, பாராட்டு விழா நடத்தப்பட்டது.

`விழாவில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்' என்று பிரபஞ்சன் வீட்டுக்கே நேரில் சென்று அழைத்து, அவரிடம் அழைப்பிதழை அளித்திருக்கிறார் மாநில முதலமைச்சர் நாராயணசாமி. தற்கால அரசியல் சூழலில் இப்படி ஒரு காட்சியை, கற்பனைகூட செய்ய முடியாது. இலக்கிய உலகமே மகிழ்ந்து கொண்டாடிய தருணம் அது. விழா மேடையில் பிரபஞ்சனின் தலையில் கிரீடம் சூட்டிய முதலமைச்சர் நாராயணசாமி, அவருடைய இலக்கியத் தொண்டுக்காக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். நிதி நெருக்கடி, நிலுவைத் தொகைக்கான அரசு ஊழியர்களின் போராட்டம் போன்றவற்றில் புதுச்சேரி அரசு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இப்படி ஒரு விழாவை நடத்துவதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அதற்காக முதலமைச்சர் நாராயணசாமியைப் பாராட்டியே ஆக வேண்டும். முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, கலைப் பண்பாட்டுத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முதலமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் என அனைவரும் எழுத்தாளனைக் கொண்டாட அமர்ந்திருந்தார்கள்.

பிரபஞ்சன்

சக எழுத்தாளன் போற்றப்படுவதைக் காண, மேடைக்குக் கீழே பார்வையாளர்களுடன் பார்வையாளராக அமர்ந்திருந்தார் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன். வாழ்த்துரைக்காக மேடை ஏறிய அவர், ``பிரபஞ்சனுக்கு நாங்கள் சென்னையில் நடத்திய விழாவுக்கு வருகை தந்திருந்த முதலமைச்சர் நாராயணசாமி ஐயா, `புதுச்சேரியில் நாங்கள் இதைவிட சிறப்பாக விழா எடுப்போம்' எனக் கூறியிருந்தார். பொதுவாக, அரசியல்வாதிகள் பேச்சை எழுத்தாளர்கள் நம்புவதில்லை. ஆனால், சொன்ன சொல்லை தன்னால் காப்பாற்ற முடியும் என்பதை முதலமைச்சர் ஐயா நிரூபித்திருக்கிறார். அதையெல்லாம்விட விழாவுக்கான அழைப்பிதழை எழுத்தாளரின் வீட்டுக்கே சென்று கொடுத்து அழைத்திருப்பது அரசின் முக்கியமான முன்னோடிச் செயல். அவருக்கு எங்கள் மனம் நிறைந்த அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எழுத்தையும் இலக்கியத்தையும் மேம்படுத்துவதுதான் பண்பாட்டுத் துறையின் பணி என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது, புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை. `பிரபஞ்சன், புதுவைக்குச் சொந்தக்காரரா... தமிழகத்துக்குச் சொந்தக்காரரா?' என்றால் தமிழ்ப் பேசும் அத்தனை பேருக்கும் சொந்தக்காரர் அவர். உலகின் எந்த மூலையில் வசித்தாலும் தமிழ்ப் பேசும் அனைவராலும் போற்றப்படும் படைப்பாளி, பிரபஞ்சன்” என்றார்.

முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது, ``புதுச்சேரி தமிழ் வளர்ச்சிக் குழுவில், பிரபஞ்சனுக்குப் பொறுப்பு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், அடுத்த ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுக்குப் பிரபஞ்சனின் பெயர் புதுச்சேரி மூலம் பரிந்துரைக்கப்படும்” என்றார்.

புதுச்சேரி

இறுதியாக ஏற்புரை வழங்கிய பிரபஞ்சன், ``என்னுடைய 73 ஆண்டுகால வாழ்வில் இதுபோன்ற ஒரு பெருமையும் சிறப்பும் எப்போதும் இருந்ததில்லை. உலகத்தின் மிகப்பெரிய நாடுகளில் எனக்குப் பாராட்டு விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், நான் பிறந்த மண்ணின் மக்களிடமிருந்து இப்படியான ஒரு பாராட்டு கிடைத்திருப்பது என் வாழ்வில் மகத்தான தருணம். அதே நேரத்தில் இந்தப் பாராட்டுக்கெல்லாம் தகுதியுடையவனாக ஏதேனும் கொஞ்சமாவது இருந்திருக்கேன் என்பதில், எனக்குக் கூடுதல் சந்தோஷம்.

நண்பர் எஸ்.ராமகிருஷ்ணனின் வருகை சாதாரணமானதல்ல. என்னுடைய சமகாலத்தின் மாபெரும் கலைஞன் அவர். எங்களுக்குள் போட்டி, பொறாமை என எதுவுமே வந்ததில்லை. ஏனென்றால், என் நாற்காலியில் அவரும் அமர முடியாது; அவர் நாற்காலியில் நானும் அமர முடியாது. எங்கள் நாற்காலிகள் எது எது என எங்களுக்குத் தெரியும்.

நண்பர்களே... ஒரேயொரு சிறுகதைதான் உலகத்தில் உள்ள அத்தனை கதைகளையும் மாற்றியமைத்தது. இத்தனை கதைகள் உலகில் நிலவுவதற்கு அந்த ஒற்றைக் கதைதான் காரணம். ஓய்வுபெற்ற ராணுவ வீரன் ஒருவன், தபால் இலாக்காவில் அமர்ந்துகொண்டு எழுத முடியாதவர்களுக்கும் எழுதத் தெரியாதவர்களுக்கும் தபால் எழுதிக் கொடுத்துக்கொண்டிருப்பான். அதன்மூலம் கிடைக்கும் தொகையில் சாப்பிடச் சென்றுவிடுவான். ஒருநாள் காலையில் 6 வயதுச் சிறுமி, அந்த ராணுவ வீரனிடம் வந்து `எனக்கு ஒரு தபால் எழுத வேண்டும்’ எனக் கேட்கிறாள். `யாருக்கு எழுத வேண்டும்?' எனக் கேட்டவனிடம் `கடவுளுக்கு’ என்று பதிலளிக்கிறாள் சிறுமி.

புதுச்சேரி

`கடவுளுக்கு நீ என்னம்மா எழுதப்போகிறாய்?' என்று கேட்கிறான் அந்த வீரன். அதற்கு, `மூணு நாளா என் அம்மா படுத்துக்கொண்டேயிருக்கிறார். கொஞ்சம்கூட அசையவே இல்லை. அவங்கள எழுந்து எனக்குச் சோறு போடச் சொல்லணும்'னு கடவுளுக்குக் கடிதம் எழுதிக் கொடுங்கனு சொல்றா.

ஏதோ கோளாறாக இருக்கிறதே என நினைத்த அந்த வீரன், அந்தச் சிறுமியுடன் அவள் வீட்டுக்குச் செல்கிறான். அங்கே போய்ப் பார்த்தவுடன் தெரிந்துகொள்கிறான் சிறுமியின் அம்மா இறந்துபோய் மூன்று நாள்கள் ஆகிறது என. அது அந்தக் குழந்தைக்குத் தெரியவில்லை. அந்த அம்மாவை அடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அந்தக் குழந்தைக்குத் தகப்பனாகிறான் அந்த வீரன். அந்தக் குழந்தையோடு தன்னை ஒப்புக்கொடுத்துக்கொள்கிறான். அன்று முதல் அவனது வாழ்க்கையின் முறையே மாறிவிடுகிறது.

புதுச்சேரிஇப்படியான ஒரு கதை, சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது. அந்தக் கதையிலிருந்துதான் பிரெஞ்சு மேதைகள் பிறந்தார்கள்.  அதே கதையிலிருந்துதான் ரஷ்ய மேதைகள் பிறந்தார்கள். நான் வரைக்கும் அங்கிருந்துதான் பிறந்தேன். மனிதனை மனிதனுக்கு உணர்த்துவதைத் தவிர இலக்கியத்துக்கு வேறு ஒரு வேலையும் இல்லை.

எழுத்தாளர்கள் ஏன் பாராட்டப்படவேண்டியவர்கள்? காரணம், அவர்கள் அவர்களுக்காகச் சிந்திப்பதில்லை. சமூக உயர்வுக்காக அவர்கள் தங்களை ஒப்புக்கொடுப்பதாலேயே இந்தச் சமூகம் எழுத்தாளர்களையும் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

புதுச்சேரியைப் பற்றி இதுவரை 10 ஆயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறேன். இப்போது சொல்கிறேன் முதலமைச்சர் நாராயணசாமி கொடுத்திருக்கும் இந்த ஊக்கத்தால், இன்னும் 10 ஆயிரம் பக்கங்கள் எழுதுவேன். `சோழர்கள் காலத்தில், பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில், சுதந்திரம் பெற்ற பிறகு என இந்தக் காலகட்டங்களில் புதுச்சேரி எப்படி இருந்தது?, என்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது?' என்ற தலைப்புகளில் மூன்று பேராய்வுகளை இந்த ஆண்டுக்குள் நான் எடுக்கப்போகிறேன். அதுமட்டுமல்ல, இனி என் பெரும்பாலான வாழ்க்கையை புதுச்சேரியிலேயே அமைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறேன். என் கடைசி நாளில் புதுச்சேரிக்காரனாக இங்கு இருந்து எழுதிக்கொண்டிருப்பேன்” என்று சொல்லி விடைபெற்றார்.

எழுத்தாளுமைகளின் பேரழகான நீங்கள், எங்கு இருந்து இயங்கினாலும் எப்போதும் இலக்கியப் பிரபஞ்சத்தின் மைந்தன்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!