வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (07/05/2018)

கடைசி தொடர்பு:20:40 (07/05/2018)

`பிரியாவின் இறப்பில் உண்மை தெரியும்வரை விடமாட்டோம்' - போலீஸூக்கு எதிராகக் கொந்தளிக்கும் உறவினர்கள்

கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் உடலை உறவினர்களிடம் காட்டாமல் புகார் தருவதற்குள் உடலை எடுத்துச் சென்ற காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் செய்ததோடு, "என் மகள் பிரியாவின் சாவுக்கு காரணமானவர்களைத் தண்டிக்கும் வரையிலும் விடப்போவதில்லை" எனக் கொந்தளித்தனர்.

போலீஸூக்கு எதிராக உறவினர்கள் போராட்டம்

அரியலூர் மாவட்டம், குமிழியம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜுக்கும் பிரியாவுக்கும் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. வரதட்சணை தொடர்பாகக் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு வரதட்சணை வாங்கி வருவது சம்பந்தமாகக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மர்மமான முறையில் பிரியா உடலில் காயத்துடன் வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இது குறித்து இளம்பெண்ணின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உறவினர்கள் வருவதற்குள் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பெண்ணின் உடலை உறவினர்களிடம் காட்டாமல் புகார் தருவதற்குள் பிரேத பரிசோதனைக்காக உடலைக் கொண்டு சென்ற காவல்துறையைக் கண்டித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் உடையார்பாளையம் செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். இந்நிலையில் பிரியாவின் கணவர் காமராஜ் போலீஸில் சரணடைந்தார். அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை செய்து வருகின்றனர். 

                                        

போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேசியபோது, "பிரியாவின் சாவில் மர்மம் இருக்கிறது. தொடர்ந்து காமராஜ் வரதட்சணை கேட்டு பலமுறை அடித்து அனுப்பியிருக்கிறார். நாங்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரியாவை காமராஜ் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறோம். இரண்டு நாள்களுக்கு முன்பு கையில் காசு இல்லை என்பதற்காக அடித்து, தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்கள். ஒரு பெண் இறந்துவிட்டால் அவர்கள் வீட்டுக்குத் தகவல் கொடுக்காமல், காவல்துறையினருக்குத் தெரிவித்திருக்கிறார்கள். காவல்துறையினரும் நாங்கள் வருவதற்குள் எப்படி எடுத்தார்கள். பிரியாவின் உடல் முழுவதும் காயங்கள் நிறைந்திருக்கின்றன. காவல்துறையினர் பணத்தை வாங்கிக்கொண்டு ஒருதலைபட்சமாகச் செயல்படுவது சரியா. பிரியாவின் இறப்பில் உண்மை தெரியும் வரை விடப்போவதில்லை" என்று கொந்தளிக்கிறார்கள்.