வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (07/05/2018)

கடைசி தொடர்பு:18:07 (07/05/2018)

`விஷ்ணுபிரியா கொலை செய்யப்படவில்லை' - வழக்கை கைவிட்டது சி.பி.ஐ

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ கைவிடுவதாகத் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ கைவிடுவதாகத் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஷ்ணுப்பிரியா

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா. இவர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்தார்.  தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் இருந்து வந்தார். இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு, டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவல்துறை, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என இந்த வழக்கு கைமாறிக்கொண்டே இருந்தது. குறிப்பாக, கடந்த 2016-ம்  ஆண்டு முதல் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது.

இந்நிலையில், விஷ்ணுபிரியாவின் வழக்கை கைவிடுவதாகக் கோவை நீதிமன்றத்தில், கடந்த டிசம்பர் மாதம் சி.பி.ஐ மனுத்தாக்கல் செய்தது. இதுகுறித்த அறிவிப்பை, கடலூரில் உள்ள விஷ்ணுபிரியாவின் தந்தைக்கு கோவை நீதிமன்றம் கூரியர் மூலம் அனுப்பியுள்ளது. அந்த அறிவிப்பில், “உங்களின் வழக்கு சி.பி.ஐ நிலையத்தினரால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்ட வழக்கு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, வழக்கு சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 9.5.2018 தேதியன்று, இந்நீதிமன்றத்தில் ஆஜராகி தெரியப்படுத்த உத்தரவிடப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோவை நீதிமன்றத்தில், வருகின்ற 9-ம் தேதி விஷ்ணுபிரியாவின் தந்தை ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.