1,60,000 பணம்... 2 பீர்... 7 குவார்ட்டர்... டாஸ்மாக் ஊழியர்களைக் கலங்கடித்த முகமூடிக் கொள்ளையர்கள்

டாஸ்மாக்

டாஸ்மாக் கடையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவர் கழுத்திலும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து மிரட்டி முகமூடி அணிந்து வந்த 6 மர்மநபர்கள் கடையில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். கூடவே, போதை ஏற்றிக் கொள்ள இரண்டு பீர்கள், 7 குவார்ட்டர் பாட்டில்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் சரகத்துக்குட்பட்ட மணல்மேடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை எண் 5029. இங்கு விற்பனையாளராக சிவக்குமாரும், உதவி விற்பனையாளராக விஸ்வநாதன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு கடை மூடும் நேரத்துக்குச் சற்று முன்பாக இரண்டு இரு சக்கர மோட்டார் வாகனங்களில் முகத்தில் கர்சீப்பை முகமூடியாக அணிந்து வந்த 6 நபர்கள், சிவக்குமார் மற்றும் விஸ்வநாதன் கழுத்தில் கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து மிரட்டி, விற்பனை செய்து வைத்திருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை பறித்துக் கொண்டார்கள். மேலும், இருவரிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்ததோடு, கடையிலிருந்து 2 பீர், 7 குவார்ட்டர் மதுபானங்களையும் குடிப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர் ஒருவர், ``அரவக்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இப்படி அடிக்கடி கொள்ளை நடக்குது. கடந்த ஆறு மாதங்களுக்குள் ஐந்து கடைகளில் இப்படிக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அதில் ஒரு கடையில் வெறும் சரக்குகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றது ஒரு கொள்ளைக் கும்பல். மற்ற இடங்களில் பணத்தை எடுத்துச் சென்றார்கள். இப்போதும் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இங்குள்ள காவல்துறையின் மிக மோசமான செயல்பாட்டால்தான், இப்படி டாஸ்மாக் கடைகளில் அடிக்கடி துணிச்சலாகக் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. போலீஸ் விழித்துக் கொண்டு, கொள்ளையர்களைப் பிடித்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!