வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (07/05/2018)

கடைசி தொடர்பு:19:43 (07/05/2018)

`நீட் தேர்வு மைய ஒதுக்கீடு விவகாரம்!’ - சிபிஎஸ்இ-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

நீட் தேர்வு எழுதுவதற்காக மாநிலங்கள்விட்டு சென்றுதான் ஆகவேண்டுமெனும் நிர்ப்பந்தம் செய்து, தமிழக மாணவர்களுக்குத் துன்பம் இழைத்ததற்காக தேசிய மனித உரிமை ஆணையம் கேள்விகளை எழுப்பியுள்ளது. 

நீட்

இன்று காலை வெளியான செய்திகளைப் பார்த்து, இந்த விவகாரத்தை சுயவழக்காக எடுத்துக்கொண்ட மனித உரிமை ஆணையம், தமிழக அரசின் தலைமைச்செயலாளர் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) தலைவர் இருவரும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. 

இன்றைய அறிக்கையொன்றில் சி.பி.எஸ்.இ. கூறியுள்ளபடி, 3,685 மாணவர்கள் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களில் தேர்வை எழுதியிருக்க வேண்டும் என ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டிலேயே போதுமான தேர்வுமையங்களை அமைக்கத் தவறியது ஏன் என நீட் அதிகாரிகளும் சி.பி.எஸ்.இ. அதிகாரிகளும் விளக்கம் அளிக்கவில்லை என்று மனிதவுரிமை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் வெளிமாநிலத்துக்குச் சென்று நீட் எழுதும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனும் அறிவிப்பையும் குறிப்பிட்டுள்ளது. 

செய்திகளில் வந்த தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், மாணவர்களின் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன எனக் கூறியுள்ள தேசிய மனித உரிமை ஆணையம், ``இந்தத் தேர்வினால் மாணவர்கள் மிக அதிகமான அழுத்தத்தை எதிர்கொண்டனர். நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களைச் சரிசெய்வது உறுதிப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால், மாநிலத்துக்கு உள்ளேயே தேர்வு மையங்களை அமைக்காமல் மாநில அரசு மற்றும் சிபிஎஸ்.இ. அதிகாரிகள் தவறியதால்தான் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதாகிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. 

வெளிமாநிலத்துக்குச் சென்று தேர்வு எழுதவேண்டிய கட்டாயத்துக்கும் தொந்தரவுகளுக்கும் ஏன் மாணவர்கள் ஆளாக்கப்பட்டனர் என்பதையும் வரும்காலத்தில் இப்படி நிகழாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதையும் பற்றி அறிக்கை தருமாறு மனிதவுரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.