வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (07/05/2018)

கடைசி தொடர்பு:22:30 (07/05/2018)

`அமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும்!’ முடிதிருத்துவோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தான் பேசிய பேச்சுக்கு அமைச்சர் வருத்தம் தெரிவிக்காவிட்டால் அடுத்தகட்டமாக மாவட்ட தலைநகரங்களில் போராட்டமும் அதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தை முற்றுகை இடப்போவதாக இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கம்பம் ஏ.ராஜன் எச்சரித்தார்.

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் நலச் சங்கதினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கண்டித்துக் கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

                          கடலூர்

கடந்த மாதம் 29 ம் தேதி கடலூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை ஒருமையில் பேசினார். மேலும், காவிரி பிரச்னையில் 17 ஆண்டுகள் மத்திய  அமைச்சரவையில் இருந்த தி.மு.க. என்ன செய்தது?. நிந்தரத் தீர்வை ஏற்படுத்தி தந்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க தான். நீங்கள் என்ன செய்தீர்கள்?. நாங்கள்தான் செய்தோம். காவிரி நடுவர் மன்றம் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? அதை நீங்கள் சொன்னால், நாங்கள் ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்கிறோம்’’ என்று பேசியிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த தி.முகவினர், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், தங்களது தொழிலை அமைச்சர் இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி தமிழ்நாடு மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தான் பேசிய பேச்சுக்கு அமைச்சர் வருத்தம் தெரிவிக்காவிட்டால், அடுத்தகட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் போராட்டமும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாகவும் அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கம்பம் ஏ.ராஜன் எச்சரித்தார்.