"இனிமே இந்த பானையில தண்ணி மோந்து குடிப்பியா?!" விழாவில் கலங்கி நெகிழ்ந்த ஆசிரியை தனம்

தனம்

``தனம் ஒரு ஆள படிக்க வைக்கணும்னு மத்த மூணு பிள்ளைகளையும் படிக்க வைக்கல. அவங்க அத்தனை பேர படிக்க வைக்க பண வசதியும் இல்லை"- என ஆசிரியை தனத்தின் தாயார் சொல்லிக்கொண்டிருக்கும்போது மொத்த அரங்கமும் நிசப்தத்தில் உறைந்து கிடக்கிறது.

1995 ம் ஆண்டு தன் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பொதுப் பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்ததற்காக, `கீழ்சாதிப் பொண்ணு நீ... இனிமே இந்தப் பானையில இருந்து தண்ணி மோந்து குடிப்பியா?!' என்று ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் தன் பார்வையை இழந்தார் தனம். தற்போது, தனது B.Ed படிப்பை முடித்துவிட்டு, சாதியின் காரணத்தைச் சொல்லி தான் தாக்கப்பட்ட அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்கிறார் அவர். 

தனம்

சமீபத்தில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14வது மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் தனம். நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் எனக் கலை இலக்கிய ஆளுமைகள் சூழ நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் `சாதியில்லா தமிழகம்' பற்றி பலர் பேசினர். கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சுசீந்திரா, ஆலிமா, பாரி கபிலன், திலகவதி போன்றோர் கவிதைகள் வாசித்தனர். பின்பு, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தனம் அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு, ``அவர் படித்த அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும். இதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனம் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஐ.ஏ.எஸ் அதிகாரியும், திரைப்பட இயக்குநருமான திரு.ஞான ராஜசேகரன் இயற்றிய ``ஒரு கண் ஒரு பார்வை" என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்து திரு.ஞான ராஜசேகரன், நடிகை ரோகிணி மற்றும் நடிகர் சத்யராஜ் தங்களின் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிருந்தனர்.

தனம்

`` `தீண்டாமை ஒரு பாவச்செயல்' என்று கற்பித்து என் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டிய ஆசிரியரே, என் கண்ணைச் சிதைத்த அவலம் என் வாழ்க்கையில் இடியாக இறங்கியிருக்கிறது. இதற்கு சாதி என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை. சம்பவம் நடந்து 23 வருடங்கள் கடந்துவிட்டாலும் என்னால் இன்றளவும் எதையும் மறக்க முடியவில்லை. `சாதியில்லா தமிழக'த்துக்கு முன்னோடியாக என்னை நிறுத்தி இவ்வளவு பெரிய பொறுப்பை த.மு.எ.க.ச எனக்கு அளித்திருக்கிறது. வீட்டிலேயே இருந்து எதுவும் செய்ய முடியாது. இந்தப் பொறுப்புக்கு அர்த்தம் கொடுக்க வேண்டுமென்றால் எந்தப் பள்ளியில் நான் `தாழ்த்தப்பட்டவள்' என்று தாக்கப்பட்டேனோ அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து இதே நிலையை வேறு பிள்ளைகளுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் என் கனவும், என் ஆசையும் நடக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அந்தத் தீர்மானத்திற்கு ஏற்ப அதே பள்ளியில் ஆசிரியர் ஆனதும் எல்லாப் பிள்ளைகளுக்கும் என்னால் முடிந்த உதவிகளை நிச்சயமாகச் செய்வேன்.

அந்தப் பள்ளியில் மட்டுமல்லாமல், இங்கு பல மட்டங்களிலும் சாதியின் காரணத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். `சாதியில்லா தமிழகம்' எனப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், எப்போது அது நடைமுறைக்கு வரும் என யாருக்கும் தெரியாது. என் சொந்த ஊரிலேயே இன்னும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவது மறையவில்லை. இதெல்லாம் வெளி சமுதாயமும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எடுத்த முயற்சிதான் `ஒரு கண் ஒரு பார்வை' குறும்படம். எனக்கு நடந்த அந்தச் சம்பவம் ஒரு படமாக வெளிவரப்போவது தெரிந்ததும் மகிழ்ச்சியடைந்தேன். இப்படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் சாருக்கு என் நன்றி" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் 
ஆசிரியை தனம்.

தனம்

``மத்த மூணு பிள்ளைகளையும் படிக்க வைக்காம தனத்தை மட்டும் படிக்க வெச்சோம். அப்பவும் தனத்தை எங்களால பள்ளிப் படிப்பு வரைக்கும்தான் படிக்க வைக்க முடிஞ்சுது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாதான் என் மகளை கல்லூரி வரை படிக்க உதவி செஞ்சாங்க. தனம் இவ்வளவு நல்லா வருவான்னு நாங்க கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல. என் பொண்ணோட கனவும் எங்களது ஆசையும் நிறைவேறணும்னு இங்க பலரும் பல விதத்துல உதவி செஞ்சுட்டு இருக்காங்க அவங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி" என நிறைவு செய்தார் தனத்தின் தாயார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!