`சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குத் தொடருங்கள்!’ - கொதிக்கும் வேல்முருகன்

நீட் தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.அதிகாரிகள் மீது தமிழக அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.

நீட் தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.அதிகாரிகள் மீது தமிழக அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

வேல்முருகன்


நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலைய வளாகத்தில் இருக்கும் காந்தி சிலை முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தாங்களாகவே கைகளில் விலங்கு போட்டுக் கொண்டு போராட்டத்தில் நேற்று (6.5.2018) ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஜெரோன்குமார் உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி, ராமநாதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சிறைக்குச் சென்று அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், ``நீட் தேர்வினால் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சட்டம் இயற்றி அதை அனுப்பி வைத்தும், மத்திய அரசு அதற்கு ஒரு முக்கியத்துவமோ அல்லது மதிப்போ தரவில்லை. தமிழகத்தில் 10,12 ம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் போதுமான வசதிகளுடன் சிறப்பாக நடத்தும் தமிழக அரசை மத்திய அரசு நம்பவில்லை. 

தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவியரின் பூவையும் பறித்து, பொட்டுகளையும் அழித்து, வளையல்களை உடைத்தும், ஜீன்ஸ் கால்சட்டை அணியக் கூடாது என்றெல்லாம் சொல்லியும், செயல்படுத்தியும் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும். இதற்கு காரணமான சி.பி.எஸ்.இ.அதிகாரிகள் மீது தமிழக அரசு, கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்.
நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்களது பெற்றோர்களான கிருஷ்ணசாமி, கண்ணன் ஆகியோர் மரணத்துக்கு மத்திய,மாநில அரசுகள் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தமிழக அரசை நம்பாமல் நீட் தேர்வை தமிழகத்தில் நடத்தியிருப்பதன் மூலம் தமிழக மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். நீட் தேர்வை முறையற்ற முறையில் நடத்தியிருப்பது, முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருந்து வருதல், மீத்தேன் எடுத்தல், ஓ.என்.ஜி.சி.அமைப்பு பைப்புகளை அமைக்கும் திட்டம், தமிழகத்தில் 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம், சாகர்மாலா திட்டம் ஆகிய மக்களின் நலனைப் பாதிக்கும் திட்டங்களால் மக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்தும் மத்திய அரசுக்கு எதிராக, மாநில அரசு குரல் கொடுப்பதே இல்லை. பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவே தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மத்திய அரசை எதிர்த்துப் பேசுவதில்லை. 

எங்களது கட்சியை சேர்ந்த 6 பேர் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் வராத வகையில், அவர்களாகவே கையில் விலங்கு போட்டுக் கொண்டு ராமேஸ்வரத்தில் காந்திசிலை முன்பாக அமர்ந்து அறவழிப் போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. அவர்கள் கொலையோ, கொள்ளையோ, ஊழலோ எதுவும் செய்யாதபோது மத்திய அரசுக்கு பயந்து கைது செய்திருப்பதுடன் பொய் வழக்கும் போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!