`சாதியைச் சொல்லி என் மகனைச் சாகடிச்சுட்டாங்க!’ - கலெக்டரிடம் முறையிட்ட தாய் | Woman files complaint with karur district collector over his son's suicide

வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (07/05/2018)

கடைசி தொடர்பு:21:49 (07/05/2018)

`சாதியைச் சொல்லி என் மகனைச் சாகடிச்சுட்டாங்க!’ - கலெக்டரிடம் முறையிட்ட தாய்

 ``படிப்பில் சுட்டியாக இருந்த எனது மகனை சாதிரீதியாக இழிவுப்படுத்தியதால், அவன் மனமுடைந்து தற்கொலை பண்ணிக்கிட்டான். ஆனால், அவனது சாவுக்குக் காரணமான பள்ளியின் முதல்வர், நூலக ஆசிரியை, ஆசிரியை மீது எஃப்.ஐ.ஆர் போட்டும் போலீஸ் இன்னும் கைது செய்யலை" என்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் இறந்த மாணவனின் தாய் கண்ணீரோடு புகார் கொடுத்தார்.

கரூர் மாவட்டம், ஆண்டான்கோயில் கிழக்கைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகனை அருகில் உள்ள புனித அந்தோணியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார். 12 ம் வகுப்பு படித்து வந்த சரவணன், சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். `சரவணனை எல்லா இடத்திலும் பள்ளியின் முதல்வர் எல்சி ஜோசப் என்கிற அணிஸ், நூலக ஆசிரியை தேவி மற்றும் ஆசிரியை ஜெயந்தி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சாதிரீதியாக இழிவுப்படுத்தி தொடர்ந்து அவமானப்படுத்தினர். அதனாலேயே, அவன் மன உளைச்சலில் தற்கொலை பண்ணிக்கிட்டான்' என்று கரூர் நகரக் காவல் நிலையத்தில் தாய் சரஸ்வதி புகார் கொடுத்தார். மூன்று பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தார்களே தவிர, மூவரையும் இதுவரை கைது செய்யவில்லை. அரசியல் செல்வாக்கை வைத்து, அவர்கள் இந்த வழக்கில் போலீஸார் தங்களைக் கைது செய்யாமல் பார்த்துக் கொள்வதாக சரஸ்வதி குற்றம்சாட்டுகிறார். அதோடு, `தங்கள் அரசியல் செல்வாக்கை வைத்து இவ்வழக்கில் யாரையும் சாட்சி சொல்ல விடமாட்டோம். தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்துவிடுவோம்' என்று தன்னிடம் சவால் விடுவதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சரஸ்வதி புகார் கொடுத்தார். 


 `விசாரிக்கச் சொல்கிறேன்' என்று கலெக்டர் சொல்ல,`3 பேரையும் கைது செய்தால்தான் நகர்வேன்' என்றபடி கலெக்டர் அலுவலகம் எதிரே அமர்ந்து சரஸ்வதி தர்ணா செய்தார். பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் மிகவும் சிரமப்பட்டே அவரை அப்புறப்படுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நாம் சரஸ்வதியிடம் பேசினோம். ``என் மகன் சாவுக்குக் காரணமான 3 குற்றவாளிகளும் செல்வாக்கைப் பயன்படுத்தித் தப்பிக்கப் பார்க்கிறார்கள். அதனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றச் சொல்லி, மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு போட்டிருக்கிறேன். என் மகன் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை இந்த விவகாரத்தை விடமாட்டேன்’ என்றார் ஆக்ரோஷமாக.