வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (08/05/2018)

கடைசி தொடர்பு:00:30 (08/05/2018)

காவிரி ஆற்றில் விதிமுறையை மீறி மணல் குவாரி: மக்கள் எதிர்ப்பு

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவனமங்கத்தில் புதிய மணல்குவாரி அமைக்கும் நடவடிக்கைகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இது விதிமுறைக்குப் புறம்பானது என இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மணல் குவாரி

பவனமங்கலத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்ட நிலையில் ஒன்பத்துவேலி, நடுப்படுகை, திருக்காட்டுப்பள்ளி, விட்டலபுரம், கூத்தூர், உள்ளிட்டப் பகுதிகளை சேர்ந்த மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசின் விதிமுறைகளை மீறி மணல் குவாரி இங்கு அமைக்கப்படுவதாகக்  குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி மக்கள் ’கூத்தூர் பாசன தலைப்பு வாய்க்கால் அமைந்துள்ள இடத்திற்கு மிக அருகிலேயே மணல் குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகள்  நடைபெறுகிறது. இதனால் இந்த வாய்க்காலில் தண்ணீர் வருவது முழுமையாகத்  தடைப்படும். இந்தப்  பகுதியில் 50 அடி ஆழம் வரைதான் மேல் ஊற்று உள்ளது. இதற்குக் கீழே  களிமண்ணும் பாறைகளும்தான் இருக்கிறது. மணல் குவாரி அமைத்தால் இந்தப் பகுதியில் உள்ள விவசாய போர்வெல்கள் அனைத்தும் பாதிக்கப்படும். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், குடிநீருக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும்” எனக் கவலையோடு தெரிவித்தார்கள்.