வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (08/05/2018)

கடைசி தொடர்பு:13:58 (09/07/2018)

’மணல் கொள்ளையை தடுப்பவர்கள் மீது பொய் வழக்கு’ கலெக்டரிடம் முறையிட்ட மக்கள்!

 ராமநாதபுரம் அருகேயுள்ள காஞ்சிரங்குடியில் குடிநீர் ஆதாரத்தினை பாதிக்கும் வகையில் நடந்து வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்.

ராமநாதபுரம் அருகேயுள்ள காஞ்சிரங்குடியில் குடிநீர் ஆதாரத்தினை பாதிக்கும் வகையில் நடந்து வரும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர். 

மணல் கொள்ளை குறித்து புகார்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள கிராமம் காஞ்சிரங்குடி. இந்தக்  கிராமத்தின் ஜமாஅத் தலைவர் சாகுல்ஹமீது மற்றும் இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் அக்கிராமத்தைச்  சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம்  மணல் கொள்ளையை தடுக்கக்   கோரி மனு அளித்தனர். அந்த மனுவில், "காஞ்சிரங்குடியில் கடந்த 1982 -ம் ஆண்டு முதல் 33 கிராமங்களுக்கு குடிநீர் லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2.80 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்து வந்த காஞ்சிரங்குடி கிராமத்தில் தற்போது ஆண்டுக்கு 65 ஆயிரம் லிட்டர் குடிநீரே கிடைக்கிறது. போதிய மழையில்லாமையும், கிராமத்தின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பகுதிகளில் இருந்து பலர் மணலைத் திருடி விற்பனை செய்து வருவதுமே இதற்குக் காரணம். மணல் அதிகமான அளவு கொள்ளையடிக்கப்படுவதால் நீர் ஆதாரம் முற்றிலுமாக குறைந்து விட்ட நிலையில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறை மூலம் பொய் வழக்கு போட்டுவிடுகின்றனர். எனவே காஞ்சிரங்குடியில் மணல் கொள்ளைய தடுத்து நிறுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.