விதவை சான்று கொடுக்காமல் இழுத்தடிக்கும் தாசில்தார் அலுவலகம் -சேலம் கலெக்டரிடம் புகார்!

விதவை சான்று கேட்டு அலையும் இளம் பெண்

"என் கணவர் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். மேட்டூர் தாசில்தாரிடம் விதவை சான்று கேட்டால் இன்று, நாளை என இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்" என தன் இரண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு இளம் விதவை பெண் ஒருவர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

இதுபற்றி அந்த இளம் விதவை பெண்ணிடம் பேசிய போது, ''என் பெயர் ரஞ்சிதா, என் கணவர் பெயர் கருமலை எங்களுக்கு இன்பராஜ் என்ற 9 வயது மகனும்,  நேகிஷா என்ற 6 வயது மகளும் இருக்கிறார்கள். நாங்கள் கூனாண்டியூரில் குடியிருந்து வந்தோம். என் கணவர் கட்டடம் கட்டும் கொத்தனார் வேலைக்கு போயிட்டு இருந்தார்.

கடந்த வருடம் கட்டடம் கட்டும் போது மின்சாரம் உடலில் பாய்ந்து இறந்து விட்டார். அதன் பிறகு எனக்கு யாரும் ஆதரவு இல்லை. நான் கூலி வேலைக்குப் போய் என் இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் பதினொறாம் வகுப்பு படித்திருப்பதால் ஊரில் சிலர் போலீஸ் வேலைக்கு விண்ணப்பிக்கச் சொன்னார்கள். அதையடுத்து போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்து எழுது தேர்வில் வெற்றிப் பெற்று விட்டேன்.

அடுத்து வரும் 22.5.2018 அன்று உடற் தகுதி எடுக்கப் போகிறார்கள். அதற்குள் எனக்கு விதவை சான்று தேவைப்படுகிறது. நான் மேட்டூர் தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று பல முறை விதவை சான்று கேட்டும் கொடுக்கவில்லை. அரசு விதவை பெண்களுக்கு உதவி செய்வதாக சொல்லுகிறார்கள். எனக்கு எந்த ஒரு உதவியும் செய்ய வேண்டாம். ஆனால் எனக்குக் கொடுக்க வேண்டிய விதவை சான்று கொடுத்தால் நான் போராடி வெற்றி பெற்று என் குழந்தைகளை இந்தச் சமுதாயத்தில் நல்ல நிலைக்குக் கொண்டு வருவேன். ஆனால் விதவை சான்று கொடுக்காமல் இழுத்தடிப்பதால் கலெக்டரை பார்த்து முறையிடுவதற்காக வந்திருக்கிறேன்'' என்றார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!