கடன் தொல்லையால் தற்கொலை -சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

கடன் தொல்லை

கடன் தொல்லையால் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கிறார்கள். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால் காவல்துறை முழுமையாக விசாரித்து இந்த மரணத்திற்குக் காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.

இதுபற்றி செல்வராஜ் என்பவர், ''எங்க ஊரு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி வாழைக்கோம்பை கிராமம். எங்க ஊரில் உள்ள அர்ஜூனர்(55) அவரது மனைவி வெண்ணிலா(35). அவர்களுக்கு பிரகாஷ், மோகன் என்ற இரண்டு பசங்க. கடந்த வாரம் திடீரென இரவு அர்ஜூனன், வெண்ணிலா, பிரகாஷ், மோகன் ஆகிய 4 பேரும் குடும்பத்தோடு விஷம் அருந்தி இருக்கிறார்கள்.

கடன் தொல்லை - ஆர்ப்பாட்டம்

அடுத்த நாள் காலை நாங்கள் வீட்டைத் திறந்து பார்த்த போது 3 பேர் இறந்து விட்டார்கள். மோகன் என்ற பையன் மட்டும் உயிருக்குப் போராடி வந்தான். உடனே சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்ந்தோம். தீவிர சிகிச்சை பிரிவில் அவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவனும் இறந்து விட்டான். அர்ஜூனனுக்கு எங்க ஊரில் தண்ணீர் பாயும் 3 ஏக்கர் நன்செய் நிலம் இருக்கிறது. அந்தக் காட்டின் மீது உரக்கடை குமார் என்பவரிடம் ரூ 3 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
 
அர்ஜூனன் தொடர்ந்து வாங்கிய கடனுக்கு வட்டியைக் கட்டி வந்தார். இருந்தாலும் அடிக்கடி குமார் தொடர்ந்து அர்ஜூனனை மிரட்டி வந்தார். இந்நிலையில் திடீரென அர்ஜூனன் மரணம் அடைந்துள்ளது, எங்க ஊர் மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜூனனின் குடும்ப மரணத்திற்கு நீதி வேண்டும். தம்மம்பட்டி காவல்துறை இதுபற்றி கண்டுகொள்ளவில்லை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!