வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (08/05/2018)

கடைசி தொடர்பு:02:30 (08/05/2018)

நாடாளுமன்றத் தேர்தல் வரை மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்காது - திருமாவளவன் குற்றச்சாட்டு

”காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்தியர அரசு தமிழக அரசுக்கு எதிராக உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது.” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

”காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிராக உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தல்  வரை  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்   

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலைத் துவக்கப்பட்ட போது, பின்னணியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு முழுமையாக அப்போது தெரியவில்லை. ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கையால் நிகழும் ஆபத்துகளில் இதுவும் ஒன்று. கமிசன் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு  பல  தொழிற்சாலைகளைத் துவங்கிட அனுமதி அளித்துவிட்டனர். மக்களுக்கான திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு எதிரான திட்டங்கள் அனுமதிக்கப்படுகிறது.

அரசின் முக்கியமான நிபந்தனைகள் மீறப்பட்டுதான் இந்த ஆலைத் துவக்கப்பட்டுள்ளது. இதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. ஆட்சியாளர்கள் இதுபோன்ற ஆலைகளுக்கு அனுமதி அளிக்காமல் தடுத்திருந்தால் தற்போது நாம் போராடும் நிலை வந்திருக்காது. அனுமதி கொடுக்கப்பட்டாலும், ஆலைத் துவக்க நிலையில் மக்கள் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தாலும் ஆலை அமைக்கப்பட்டிருக்காது. இந்த ஆலையின் கழிவுகள் கொடூரமான நஞ்சாகும். இதனால் மண்ணும், நிலத்தடி நீரும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. அத்துடன், மக்களும் மூச்சுத்திணறல், தோல்நோய் உள்ளிட்ட உடல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். 

 

திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலை போன்ற ஆலைகளை விரட்டி அடிப்பதில் அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் மட்டுமே பொறுப்பு உள்ளது என மக்கள் நினைக்கக் கூடாது. மக்களும் இணைந்து களம் இறங்க வேண்டும். பல நாடுகளில் மக்களின் போராட்டம்தான் வெற்றி அடைந்துள்ளது. தனித்தனி அமைப்புகளாகப் போராடுவதால்தான் காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டி ஒடுக்குகிறது. ஒரே நாளில் ஒரே இடத்தில்  லட்சக்கணக்கில் மக்கள் திரண்டால் இந்த ஆலையை மூடிவிடலாம்.   

ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைவிட ஆலையின் இயக்குநர் அனில் அகர்வலும், அவரது முதலீடுகளும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில்தான் ஆட்சியாளர்கள்   கவனமாக உள்ளனர்.  வங்கிகள் மற்றும் அரசியல்வாதிகளால்தான்  பெருமுதலாளிகள் உருவாகிறார்கள்.  அம்பானியை காங்கிரஸ் அரசு உருவாக்கியது.  அதானியை பா.ஜ.க., அரசு  உருவாக்கியது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிராக உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தல்  வரை  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது“ என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து, ஆலைக்கு  எதிராகப் போராடி வரும் கிராமங்களுக்குச் சென்று ஆதரவு தெரிவித்தார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க