திருப்பூரில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு!

தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

திருப்பூரில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் புஷ்பா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ளது மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை. இங்கு பாலதண்டாயுதம் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக பேக்கிங் தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இவரை, பணிக்கு சரியாக வராதது, காலதாமதமாக வருவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாகப் பணியிடத்தில் இருந்து அடிக்கடி சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் அதிகாரிகள். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வேலைக்கு வராமல் இருந்த பாலதண்டாயுதம், சமீபத்தில் மீண்டும் பண்டக சாலையில் பணியாற்ற வந்துள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி, நீங்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளீர்கள் என்றும், அத்துடன் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த பாலதண்டாயுதம், இன்று பண்டக சாலை வளாகம் முன்பாக நின்று தன் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த நபர்கள் சிலர் ஓடிவந்து தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பாலதண்டாயுதத்தை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஒப்பந்த தொழிலாளியின் தீக்குளிப்பு முயற்சியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!