கூலி உயர்வு கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தீப்பெட்டித் தொழிலாளர்கள்!

கூலி உயர்வினை அமல்படுத்தாத தீப்பெட்டி ஆலைகளைக் கண்டித்து, கோவில்பட்டியில்  தீப்பெட்டித் தொழிலாளர்கள்,  துணை ஆய்வாளர் அலுவலத்தினை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூலி உயர்வினை அமல்படுத்தாத தீப்பெட்டி ஆலைகளைக் கண்டித்து, கோவில்பட்டியில்  தீப்பெட்டித் தொழிலாளர்கள்,  துணை ஆய்வாளர் அலுவலத்தினை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தீப்பெட்டித் தொழிலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி  மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீப்பெட்டி தொழில்கள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் தீப்பெட்டித் தேவையில் 80 சதவீதம் கோவில்பட்டியில்தான் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  இத்தொழிலை நம்பி தமிழகத்தில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக இதில் ஈடுபடும் 90 சதவிகித தொழிலாளர்கள் பெண்கள்தான். இவர்களுக்குக் கடந்த 7 ஆண்டுகளாகக் கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

அட்டைப்பெட்டி பிரிவில் வேலை செய்பவர்களுக்கு 160 பெட்டிகள் வாங்கப்படுகிறன. இதில், 100 பெட்டிகளுக்கு மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. இதற்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக் கூலி பஞ்சப்படியுடன் சேர்த்து ரூ.11.35 தான். ஆனால், உற்பத்தியாளர்கள் ரூ.5 மட்டுமே கூலியாகக் கொடுக்கிறார்கள்.

இது அடிப்படை கூலியை விடக் குறைவு என்பதைக் கண்டித்தும், கடந்த 2013 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு வெளிட்ட அரசாணையின் படி, அரசு நிர்ணயித்துள்ள கூலியை வழங்கிட வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என முத்தரப்பு  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவில், தொழிலாளர்களுக்கு,  20 சதவீதம் கூலி உயர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சில தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் உயர்த்தப்பட்ட,   20 சதவீத கூலி உயர்வினை வழங்காமல், தொழிலாளர்களுக்கு, தொடர்ந்து குறைவான கூலிபையே வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வாறு கூலி வழங்காத ஆலைகளில் வேலைபார்க்கும் பாதிக்கப்பட்ட, 100 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வட்டார தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தினர், தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தொழிலாளர் உதவியாளர் பாலகணேஷிடம், கோரிக்கை மனுவையும் அளித்தனர். அவர்,  இது குறித்து, விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால்  போராட்டம் கைவிடப்பட்டது.  தீப்பெட்டித் தொழிலாளர்களின் முற்றுகைப் போராட்டத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!