”மணிமண்டபம் கட்டுவதைப் போன்று மக்கள் நலனிலும் அக்கறை வேண்டும்” -நடிகை ஶ்ரீபிரியா

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதைப் போன்று மக்கள் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார் நடிகை ஶ்ரீபிரியா. 

ஶ்ரீபிரியா

மக்கள் நீதி மய்யத்தின் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், திருச்சியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை விசில் செயலி உள்ளிட்ட கட்சியின் முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்  பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்ரீபிரியா, “இந்த முறை கிராம சபை கூட்டம் குறித்து அனைவருக்கும் விழிப்பு உணர்வு அடைந்ததுக்கு கமல்ஹாசன் நடத்திய மாதிரி கிராம சபை தான் காரணம். மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் எந்த வரையறையும்  கிடையாது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் இதில் இணையலாம். பெண்கள், மாணவர்கள்,18 -35 வயதிற்குள்ளவர்கள் இதில் அதிக அளவில் இணைந்துள்ளார்கள். கட்சியில் சேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்த்து விட்டு அவர்களுக்கு நாங்கள் பொறுப்புகளை வழங்க உள்ளோம். முன்னாள் முதல்வருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியிருப்பது நல்ல விஷயம் தான். அதில் காட்டும் அக்கறை மக்கள் நலனிலும் காட்ட வேண்டும். எங்களுடைய கொள்கை மக்கள் நலன் தான்.  விஸ்வரூபம் 2 வெளி வர அனைத்து வேலைகளிலும் நடந்து வருகிறது. பாஜக வுக்கு எதிரான கொள்கை என்பது எங்களுடைய கொள்கை கிடையாது. அநியாயமான கொள்கைகளை தான் எதிர்ப்போம்” என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!