கல்பாக்கம் அணு விஞ்ஞானி கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள்!

கல்பாக்கம் அணுமின் விஞ்ஞானி பாபுராவ் கொலை வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கல்பாக்கம் அணுமின் விஞ்ஞானி பாபுராவ் கொலை வழக்கில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணைசெய்துவருகின்றனர். இதனால், நீண்ட காலமாக துப்பு துலங்காமல் இருந்த வழக்கு முடிவுக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்பாக்கம் அணுமின் நிலையம்

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக வேலைசெய்தவர் பாபுராவ். ஆந்திராவைச் சேர்ந்த இவர், ஓய்வு பெற்றபின் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள வாயலூர் பகுதியில் மனைவியுடன் வசித்துவந்தார். கடந்த 2016 நவம்பர் மாதம் வீட்டில் தனியாக இருக்கும்போது மர்ம நபர்களால் பாபுராவ் கொலை செய்யப்பட்டார். கல்பாக்கம் அணுமின் நிலைய ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணைசெய்துவந்தார்கள். காவல் துறையினர் தீவிரமாக கொலையாளிகளைத் தேடிவந்தும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் ஹதிமானி ஸ்பெஷல் டீமில் உள்ள காவலர்கள், வேறு ஒரு வழக்கிற்காகப் புதுப்பட்டினம், பூந்தண்டலம் ஆகிய பகுதிகளில் உள்ள சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்து விசாரணை நடத்தினர். அதில் நான்கு பேர்,    2016 -ல் விஞ்ஞானி பாபுராவைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து, அவர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணைசெய்துவருகிறார்கள். குற்றவாளிகள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!