``நீட் தேர்வுக்கு மத்திய அரசு முறையான ஏற்பாடுகளைச் செய்யவில்லை” -ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

'நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு நடத்தும் மத்திய அரசு, அதற்கான ஏற்பாட்டை முறையாகச் செய்யவில்லை. கிருஷ்ணசாமியின் மறைவுக்கு மத்திய மாநில அரசுகள்தான் பொறுப்பு' என சி.பி.எம்., ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நீட் தேர்வு எதிராக பேசிய ராமகிருஷ்ணன்

'களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்' இரண்டாம் தொகுதி நூல் வெளியீட்டு விழா,  தஞ்சாவூரில் நடந்தது. இதில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். "உச்ச நீதிமன்ற ஆணைப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் முட்டுக்கட்டைப் போட்டுவருகிறது. மேலும், கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்து வழக்கை இழுத்தடிப்புசெய்கிறது. அரசியல் நோக்கத்துடன் செயல்படும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நீட் தேர்வு நடத்தப்படும் எனக் கூறும் மத்திய அரசு, அதற்கான முறையான ஏற்பாடுகளைச் செய்யவில்லை இதனால், தமிழகத்தைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான மாணவர்கள் வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில், மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தால், அங்கு ஏராளமான மாணவர்கள் எழுதியிருக்க முடியும். திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி இறந்திருக்க மாட்டார். இப்பிரச்னையில், மத்திய அரசும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசும் முறையான ஏற்பாட்டைச் செய்யவில்லை. கிருஷ்ணசாமியின் மறைவுக்கு இரண்டு அரசுகளும்தான் பொறுப்பு.
ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஏற்கெனவே போராட்டங்கள் நடத்தியது. அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, ஜனநாயக ரீதியாகப் போராடும் அவர்களை அரசு கைதுசெய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை அரசு கைவிட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!