வெயிலுக்கு உயிரைவிடும் மான்கள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?

முன்னாடி எல்லாம் எவ்வளவு வெயில் இருந்தாலும் சுனைகளில் நீர் வற்றாது. ஆனால், தற்போது சில ஆண்டுகளாக மலையில் வறட்சி ஏற்பட்டுவிடுகிறது.

மதுரை மேலூரை அடுத்த அரிட்டாபட்டி கிராமம், கோடையிலும் பசுமையைத் தாங்கி நிற்கும் கிராமமாகும். 7 மலைகளால் சூழ்ந்தது இந்தக் கிராமம். இங்கிருக்கும் குடைவரைக் கோயில் மிகவும் பிரபலமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கிராமம், சில வருடங்களுக்கு முன்தான் கிரானைட் முதலைகளிடமிருந்து காப்பாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராமத்தில், அரிய வகை பறவைகள் உள்ளன. இதைக் காண மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வந்துசெல்கின்றனர். "இங்குள்ள 7 மலைகளில், பெருமாள் மலையில்தான் மான்கள் வசித்துவருகின்றன. நரசிங்கம்பட்டிக்கும், அரிட்டாபட்டிக்கும் இந்தப் பெருமாள் மலையில் உள்ள மான்கள் தண்ணீர் தேடி மலையை விட்டு கீழே இறங்குகின்றன. அப்போது, விபத்தில் சிக்கி இறப்பது வழக்கமாகிவருகிறது" என்று அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்

மான்கள்

இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் ரவிச்சந்திரன் கூறுகையில் “அரிட்டாபட்டியில் விலங்களும் பறவைகளும் அதிக அளவு வாழ்வதற்குக்  காரணம், மலைகளும் அதில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட சுனைகளும்தான். முன்பெல்லாம் எவ்வளவு வெயில் இருந்தாலும் சுனைகளில் நீர் வற்றாது. ஆனால், சில ஆண்டுகளாக மலையில் வறட்சி ஏற்பட்டதால், மான்கள் தண்ணீருக்காக மலையை விட்டு இறங்குகின்றன. சில நாள்களுக்கு முன்கூட, ஒரு மான் தண்ணீருக்காக கீழே இறங்கியபோது நாய் ஒன்று துரத்தியதால் 100 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டது. சில வாரங்களுக்கு முன் ஒரு மான், மலையிலேயே இறந்தது. அந்தத் தகவல்கூட வெளியிடப்படாமல் மூடிமறைக்கப்பட்டது. எனவே, மான்களுக்குத் தண்ணீர் கிடைக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இங்கு, பல்வேறு அரிய வகைப் பறவையினங்கள் உள்ளன. இதைச் சமூகவிரோதிகள் இரவு நேரங்களில் பிடிக்க வருகின்றனர். லகார் பால்கன் என்று சொல்லக்கூடிய லகுடு பறவைகூட இங்குதான் வசிக்கிறது. எனவே, இப்பகுதியை உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட  இடமாக அறிவிக்க வேண்டும்" எனக்  கோரிக்கை விடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!