வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (08/05/2018)

கடைசி தொடர்பு:08:47 (08/05/2018)

தூத்துக்குடியில் வணிகர் சங்கத் தலைவர் வீடு மீது கல்வீச்சு! ஸ்டெர்லைட் எதிர்ப்பு காரணமா?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் வணிகர்களை ஒருங்கிணைப்பு செய்து வரும், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவரின் வீடு, மர்ம நபர்களால் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் வணிகர்களை ஒருங்கிணைப்பு  செய்துவரும், தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவரின்  வீடு,  மர்ம நபர்களால் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான் போராட்டம்

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவராக இருப்பவர், விநாயகமூர்த்தி. இவர், தூத்துக்குடி சிவன் கோயில் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.  கடந்த மார்ச் 24-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். அன்று, பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுதிரண்டு, கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கு, வணிகர்கள் சங்கம் முழு மூச்சாக நின்றது.  இந்த ஆலை மூடப்படும் வரை வணிகர்கள் சார்பில் தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவது என வணிகர்கள் சங்கக்  கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நேற்று (7.5.18) இரவு  பைக்கில் வந்த மர்ம நபர்கள்,  விநாயகமூர்த்தி வீட்டின்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதில், வீட்டின் முன் பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.  கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வருவதைக் கண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து விவரம் அறிந்து அங்கு வணிகர்கள் திரண்டதால், அப்பகுதியில் பதற்றம் நீடித்தது.

மத்திய பாகம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், இதுகுறித்து அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில்  உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக்கொண்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் மத்திய பாகம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம்குறித்து,  தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த சில நாள்களுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கப் பேரவையின் மாநாட்டில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திதான் முதலாவது தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவானவர்கள்,  எனது வீட்டின்மீது கல் எறிந்து தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதற்கெல்லாம் நான் பயப்படப்போவதில்லை. இனி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி வணிகர்கள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் தீவிரமடையும்” என்றார். இக்கல்வீச்சுத் தாக்குதலால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க