வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (08/05/2018)

கடைசி தொடர்பு:11:07 (08/05/2018)

‘மேல இருந்து எங்களுக்கு அழுத்தம் கொடுக்குறாங்க!’- தேர்தல் முறைகேடு தொடர்பாக அதிகாரியின் பதில்!

முறைகேடு

‘கைத்தறி சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் முறைகேடு செய்துள்ளனர். எனவே, தேர்தலை ரத்துசெய்யுங்கள்’ எனப் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு அளித்தனர். 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில்,  CH.28 ஜீவா கைத்தறி நெசவாளர் மற்றும் விற்பனை சங்கம் செயல்பட்டுவருகிறது. இந்தச் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்துமுடிந்தது. ஆனால், வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, தேர்தல் முடிவு வெளியிடும் வரை ஆளுங்கட்சியினரின் ஆதிக்கம் இருந்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட கைத்தறி சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், முறைகேடாக நடைபெற்ற இந்தத் தேர்தலை ரத்துசெய்ய வேண்டுமெனவும் ஈரோடு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கைத்தறி சங்க உறுப்பினரான எஸ்.ஆர்.பொன்னுசாமி கூறுகையில், “ஏப்ரல் 30-ம் தேதியன்று வேட்புமனுவையே பலகட்டப் போராட்டத்துக்குப் பிறகுதான் பெற்றோம். மே 2-ம் தேதி, வேட்புமனு பரிசீலனைக்காக சங்கத்தில் காத்திருந்தோம். மதியம் ஒரு மணி வரை தேர்தல் அதிகாரியும், மேலாளரும் சங்கத்துக்கு வரவில்லை. இந்தத் தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கூறினோம். அதன்பிறகு, மதியம் 2 மணியளவில் சங்கத்துக்கு வந்த தேர்தல் அதிகாரி, வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்யாமல், ஆளுங்கட்சியைச் சேர்ந்த 7 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக, அறிவிப்பைப் பலகையில் ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் நாங்கள் முறையிட்டபோது, ‘மேல இருந்து எங்களுக்கு அழுத்தம் கொடுக்குறாங்க. நீங்க வேணும்னா கோர்ட்டில் போய் நியாயம் தேடிக்குங்க’ என எங்களைச் சமாதானப்படுத்த ஏதேதோ பதில் சொல்கிறார்.

தேர்தல் நடைமுறைகள் மற்றும் சட்டவிதிமுறைகளை மீறி, ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக இந்தத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஆளுங்கட்சியினருடன், தேர்தல் அதிகாரியும் கூட்டுச்சதி செய்து, நியாயமான வேட்பாளர்களின் மனுக்களைத் தள்ளுபடிசெய்துள்ளனர். எனவே, சட்டவிரோதமாக நடைபெற்ற இந்தத் தேர்தலை ரத்துசெய்துவிட்டு, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்” என்றார்.