சட்ட விதிமீறலில் ஈடுபடும் ஸ்டெர்லைட் நிர்வாகிகள் மீது நடவடிக்கை - சமூக ஆர்வலர் கோரிக்கை | Social activists demands should arrest Sterlite administrators for violating law

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (08/05/2018)

கடைசி தொடர்பு:10:59 (08/05/2018)

சட்ட விதிமீறலில் ஈடுபடும் ஸ்டெர்லைட் நிர்வாகிகள் மீது நடவடிக்கை - சமூக ஆர்வலர் கோரிக்கை

'அரசின் சட்ட விதிகளை மீறி, தொடர்ந்து செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள்மீது, சட்டப்பூர்வ கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர் முத்துராமன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். 

muthuramanதுாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, 19 கிராம  மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன், ”ஸ்டெர்லைட் ஆலை, மாசு கட்டுப்பாட்டு  விதியைத் தொடர்ந்து மீறிவருகிறது. அதனால், அதன் அனுமதியை ரத்துசெய்ய வேண்டும்" என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தொடர் சட்ட வீதி மீறல்களைச் செய்துவரும் வேதாந்தா நிறுவன ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

 “1974-ம் ஆண்டு தண்ணீர் சட்டம் ( பாதுகாப்பு மற்றும் மாசு தடுப்பு) பிரிவு 24-ல், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில், மாசுக் கழிவுகளைக் கொட்ட தடை விதித்திருக்கிறது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் உருக்கப்பட்ட பின் கிடைக்கும் தாமிரக் கழிவுகள், புதுக்கோட்டையின் உப்பாற்று ஓடையில் கொட்டப்படுவதால், நீர் நிலைகள் கடுமையாக மாசடைகிறது. இது, தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல, இந்த நிறுவனத்தின் அபாயகரமான கழிவுகளைக் கையாள, தமிழக மாசுக் கட்டுபாட்டு வாரியத்தால் கொடுக்கப்பட்ட அனுமதி, கடந்த 2013 ஜுலை 9-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இவ்விதி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் இன்னும் புதிப்பித்து வழங்கப்படவில்லை. 

ஸ்டெர்லைட் ஆலை, 2013 ஜுலை முதல் 2018 வரை சட்டத்திற்குப் புறம்பாக இயங்கிவந்துள்ளது. சிப்காட் நிறுவனம்,1616.41 ஏக்கர் பரப்பிலான தனது 2-வது தொழிற்பேட்டை அமைத்து செயல்படுத்திக்கொள்ள  மாசுக் கட்டுபாட்டுவாரியத்திடம் வாங்கவேண்டிய, CTE, CTO  சான்றிதழ்களைப் பெறவில்லை. உரிய அனுமதி இல்லாமல், சிப்காட் 2 வது அலகு தொடங்கப்படாத நிலையில், சட்டத்திற்குப் புறம்பாக வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு, 19 ஏக்கரில் விரிவாக்கப் பணிக்கான அனுமதியைக் கடந்த 2016-ம் ஆண்டு மாசுக் கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ளது. 

ஸ்டெர்லைட்  நிறுவனம், விரிவாக்கத்திற்கான வேலையைத் துவங்கியுள்ளது. இந்த அனுமதியை உடனே ரத்துசெய்யக் கோரி கொடுக்கப்பட்ட மனுவின்மீது நடவடிக்கை எடுக்க, மாசுக்கட்டுபாட்டு வாரிய  துாத்துக்குடி பொறியாளருக்கு ஆட்சியர் பரிந்துரைத்தும், இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தப் பொறியாளர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அனுமதி இல்லாமல் இயங்கும் ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை ரத்துசெய்ய வேண்டும்' எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close