வெளியிடப்பட்ட நேரம்: 09:53 (08/05/2018)

கடைசி தொடர்பு:12:30 (08/05/2018)

அரசு இ-சேவை மையத்தில் நீட் தேர்வுக்கு போலி ஹால் டிக்கெட்..!

அரசு இ-சேவை மையத்தில் நீட் தேர்வுக்கு போலி ஹால் டிக்கெட்..!

போலியான ஹால் டிக்கெட் கொண்டுவந்ததாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த ஜீவிதா என்ற மாணவியை, நீட் தேர்வு எழுத அனுமதியளிக்காத சம்பவத்தில், அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பித்த அந்த மாணவிக்கு அங்கு பணியாற்றியவர் போலியான ஹால் டிக்கெட் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

நாடுமுழுவதும் மே 6-ம் தேதியன்று, நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதினர். தேர்வின் போது வெளிமாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டது, சோதனை என்ற பெயரில் பல்வேறு இன்னலுக்குள்ளாக்கப்பட்டது என பெரும் பரபரப்புக்கிடையே நீட் தேர்வு நடந்தது. சேலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி ஜீவிதா போலி ஹால் டிக்கெட் கொண்டு வந்ததாகச் சொல்லி தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்பட பெரும் பரபரப்பு நிலவியது. மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மாணவி ஜீவிதாவின் பெயர் பட்டியலில் இல்லை என்றும் அவர் கொண்டு வந்த ஹால்டிக்கெட் போலியானது என்றும் தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மகள் ஜீவிதாவை, அவளுடைய தந்தை நவரத்தினராஜ் தேற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையில், ராசிபுரத்தில் உள்ள இ-சேவை மையத்தில் மாணவிக்கு போலி ஹால்டிக்கெட் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து  ராசிபுரம் காவல் நிலையத்தில் மாணவி ஜீவிதாவின் தந்தை நவரத்தினராஜ் புகார் அளித்தார்.

போலி ஹால்டிக்கெட்

நவரத்தினராஜிடம் இதுகுறித்துப் பேசினோம். “என்னுடைய மகள் ஜீவிதா நீட் தேர்வு எழுதுவதற்காக, ராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் மூலம் மார்ச் 12-ல் விண்ணப்பித்திருந்தோம். தேர்வுக் கட்டணமாக 1,400 ரூபாயும், கூடுதலாக சேவைக் கட்டணம் 200 ரூபாயும் செலுத்தி விண்ணப்பித்தோம். அதற்கான ரசீதையும் கொடுத்தார்கள். நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை அறிந்து நானும் என்னுடைய மகளும் மே 2-ம் தேதி, நாங்கள் விண்ணப்பித்திருந்த இ-சேவை மையத்துக்குச் சென்றோம். சேலம் செளடேஸ்வரி கல்லூரியில் உள்ள மையத்தில் தேர்வு எழுத என் மகளுக்கு ஹால் டிக்கெட் வந்திருப்பதாகச் சொல்லி ஒரு ஹால் டிக்கெட்டைக் கொடுத்தார். பிறகு, மே 5-ம் தேதி மதியம் சுமார் 4 மணியளவில் நாங்கள் விண்ணப்பித்திருந்த இ-சேவை மையத்திலிருந்து கலைச்செல்வி என்பவர் என்னிடம் போனில் பேசினார். ‘ஜீவிதாவின் தேர்வு மையம் மாற்றப்பட்டு, கேரள மாநிலம் கோட்டயத்தில் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வந்திருக்கிறது’ என்று சொன்னார். நாங்கள் சென்று அந்த ஹால் டிக்கெட்டை பெற்று வந்தோம். 

கேரள மாநிலம், கோட்டயம் செல்ல போதுமான கால அவகாசம் இல்லாததால், நானும் என் மகளும் சேலம் செளடேஸ்வரி கல்லூரியில் உள்ள மையத்துக்குச் சென்றோம். அப்போது 'அந்த ஹால் டிக்கெட் போலியானது' என்று தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகள் மூலமாகத் தெரியவந்தது. சேலம் செளடேஸ்வரி கல்லூரி மையத்துக்கு என கொடுக்கப்பட்ட ஹால் டிக்கெட்டைப் போலவே, கோட்டயம் மையத்துக்கு என கொடுக்கப்பட்ட ஹால் டிக்கெட்டும் போலியானது என்பது தெரியவந்தது. இந்த இரு ஹால் டிக்கெட்களும் நீட் தேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ வழங்கியது இல்லை என்றும், இ-சேவை மையத்திலிருந்த கலைச்செல்வி போலியாக ஹால்டிக்கெட்டை தயார் செய்து என் மகளை மோசடி செய்ததும் தெரிய வந்தது.

நீட் தேர்வு நடந்த அன்றைக்கு மதியமே அந்த ஹால்டிக்கெட்டை வழங்கிய கலைச்செல்வி என்பவர் எனக்கு போன் செய்தார். ‘அர்ஜென்ட்டா பணம் தேவைப்பட்டுச்சு, அதனால தான் தேர்வுக்கு அப்ளை செய்யலை. தவறு நடந்துடுச்சு, மன்னிச்சிடுங்க’ என பேசினார். அவங்க அப்படிச் சொன்னதும், கோவத்துல நான் சத்தம் போட்டுட்டு போனை வச்சிட்டேன்.

நீட் தேர்வு

பணம் வேணும்னு கேட்டிருந்தா நான் எங்கயாவது கடன் வாங்கியாவது கொடுத்திருப்பேன். இப்படி காசுக்காக, என் பொண்ணு வாழ்க்கையையே கெடுத்துட்டாங்க.  ஒருவேளை நாங்க கேரளா போய், அங்க பரீட்சை எழுத முடியலைன்னு திருப்பி அனுப்பியிருந்தா எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும். இதுமாதிரி அவங்க எத்தனை பேரை ஏமாத்தி, அவங்க வாழ்க்கையை கெடுத்தாங்கன்னு தெரியலை. இப்போதுவரை என் பொண்ணை தேத்த முடியலை. சரியா சாப்பிட மாட்டேங்குறா. என் மகளுக்கு போலியான ஹால் டிக்கெட் கொடுத்து மருத்துவ நுழைவுத்தேர்வு எழுத முடியாமல் செய்து என் மகளின் எதிர்காலத்தை வீணாக்கிய கலைச்செல்வி மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்து உரிய நீதி வழங்க வேண்டும்” என்றார்.

மாணவிக்கு போலி ஹால் டிக்கெட் கொடுத்த கலைச்செல்வி மாயமாகியுள்ளார். சம்பந்தப்பட்ட அரசு இ-சேவை மையத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


டிரெண்டிங் @ விகடன்