'ஜியோ டவரால் நோய் பரவும் அபாயம்’ - கலெக்டரிடம் புகார் கொடுத்த கிராமத்து இளைஞர்கள்

ஜியோ

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா, கோவில்பாளையம் புதுக்காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் புகார் மனுவோடும், கண்ணில் கலவரத்தோடும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். புகார் கொடுக்க வந்தவர்களின் காரணம்குறித்து கேட்டோம். 

‘எங்கள் கிராமப் பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். எங்களுடைய குடியிருப்புகளுக்கு நடுவே, ஜியோ நிறுவனம் 5-ஜி, 6-ஜிக்கான டவர்களை அமைத்துவருகிறார்கள். இது மக்களுக்கு பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்தும். எனவே, அந்த டவரை எப்படியாவது அங்கிருந்து எடுத்துடுங்க’ என்றனர்.

ஜியோ

புகார் கொடுக்க வந்த சங்கர் என்பவர் கூறுகையில், “எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டவரால் சுற்றியுள்ள 2 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த டவர் மூலமாக மூளைபாதிப்பு, வலிப்புநோய், புற்றுநோய் போன்றவை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்களே சொல்லியிருக்கிறார்கள். இந்த டவரிலிருந்து வெளியேறும் அலைக்கற்றையால், மனித உயிர்களுக்கு மட்டுமின்றி, இயற்கை வாழ் பறவையினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அப்படியிருக்க எங்கள் பகுதியில் அந்த டவர் அமைத்திருப்பதை மக்கள் மிகுந்த அச்சத்துடன் பார்க்கின்றனர்.

குறிப்பாக, எங்கள் பகுதியில் பட்டியலின மக்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். அவர்களில் பாதிபேர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்கள் இந்த டவரின் பிரமாண்டத்தைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பலரும் ஓலை வீடுகள், ஓட்டு வீடுகளில் தான் வசித்துவருகின்றனர். நாளைக்கு ஏதேனும் இயற்கைச் சீற்றங்களால் அந்த டவர் கீழே சாய்ந்தால் என்னாவது எனப் பீதியாகிறார்கள். இதனால் மக்கள் பயத்துடனேயே அந்தப் பகுதியைக் கடந்துசெல்கின்றனர். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் டவரை ஏன் எங்கள் பகுதியில் அமைக்கிறார்கள். நாங்களும் மனிதர்கள் தானே. எனவே, மக்களை அச்சுறுத்தும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த டவரை எங்கள் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!